மலர்ச்சி... கிளர்ச்சி... அழற்சி... Allergy...
Allegra, Benadryl, Claritin இப்ப Zyrtec
A முதல் Z வரை மாத்திரையோ Hitech
ஆனால்,
Allergy இன்னும் போகலை
Energy எனக்குப் பத்தலை
கண்ணுல எரிச்சல் நிக்கலை
மூக்குல தண்ணீ(ர்) வத்தலை
Park ல ஹாயா நடக்க முடியலை
பூக்களைப் பார்த்து இரசிக்க முடியலை
போடும் தும்மலை எண்ண முடியலை
நம்புங்கள் அடடா என்னால் முடியலை
Pollen எனக்கு Villian ஆனது
வாழும் நாட்கள் இன்னல் ஆனது
அட
வசந்த காலம் இப்ப எனக்கு
கசந்த காலம் போல இருக்கு!
மகரந்தப் பூக்களின் மாநாடா
வண்ண வண்ணமாய் நடக்கிறது
வண்டினம் வந்தங்கு உறவாட
மலர்க ளெல்லாம் மகிழ்கிறது
சுகந்தம் உள்ளத்தைக் களவாட - புது
சுகமதை அள்ளித் தருகிறதே
கண்டு களித்திட முடியாமல் - இந்த
அலர்ஜி வந்து தடுக்கிறதே!
நம்மூரிலும் வசந்த காலம் உண்டு - மனது
மயங்கும் வர்ணஜாலம் கண்டு
அலர்ஜி என்றொரு தொல்லை இல்லை - அங்கு
அழகை இரசித்திடவோர் கவலை இல்லை
குளிரும் வெப்பமும் இரண்டும் உண்டு - மனம்
மகிழும் இதமாய் இருக்கக் கண்டு - பூந்
தளிரிலும் மலரிலும் மொய்க்கும் வண்டு - இளந்
தென்றல் சென்றிடும் நம்மைத் தழுவிக் கொண்டு!
இளவேனிற் காலம் இந்திய நாட்டில்
இளநீராய் இனித்திடுமே
மலர்ந்திடும் மலர்களும் நறுமணம் பரப்பிட
மனமது மகிழ்ந்திடுமே
அழுகின்ற குழந்தைபோல் கண்களில் நீருடன்
அலர்ஜி வந்ததில்லை - எப்
பொழுதும் ஒருவித எரிச்சல் உள்ளத்தில் - இது
போல இருந்ததில்லை!
கண்ணில் படாத மகரந்த துகள்கள்
கண்ணில் பட்டு வருத்திடுமே
கண்ணைக் கசக்கும் காரிகையாய் - தினம்
என்னையும் மாற்றிடுமே
கண்கள் சிவந்து குடிகாரனோ இவனென
எண்ண வைத்திடுதே
வண்ண மலர்களின் சின்னத் துகள்கள் - இத்தனை
இன்னல் தருகிறதே!
மலர்களை மொய்க்கும் வண்ணத்துப் பூச்சிக்கு
அலர்ஜி வருவதில்லை
உலகையே ஆட்டிப் படைக்கும் மனிதனுக்கு - இதை
தடுத்திட முடியவில்லை
இளகிய மனம் கொண்ட இயற்கையிடம்
இதற்கொரு விடையுமில்லை - என்றும்
அழகை இரசித்திட முடியாமல்
இருப்பதே பெரிய தொல்லை!
மகரந்தச் சேர்க்கை மலர்களுக் கென்றும்
மிக மிக அவசியமே
நிகரதற் குண்டா அவனியில் என்றும்
இயற்கையின் அதிசயமே
நகரெங்கும் பூத்துக் குலுங்கிடும் மலர்களை
நெருங்கவும் முடியவில்லை
முகர்ந்ததன் நறுமணம் முழுவதை யென்னால்
நுகரவும் முடியவில்லை!
இருப்பினும் இதுதான் வாழ்க்கை யென்று
இயற்கை உணர்த்தியதே
இடர்தரும் இன்னல்கள் இடைவெளி யில்லாது
தடைபல தருகையிலே
தொடர்ந்திடும் தடைகளைத் துணிவுடன் தகர்க்கையில்
தெளிவது பிறந்திடுமே
கடந்ததை செல்கையில் அடைந்திட முடியும்
மகிழ்ச்சியின் வாசலையே!
சுகந்தம் வீசும் வசந்தம் கூட - ஒரு
வருத்தம் தருவது ஏன்?
சுகமாய் மட்டும் வாழ்க்கை இருந்தால் - அது
சுவையாய் இருந்திடுமா?
இன்பமிருந்தால் துன்பமும் உண்டு - அதை
உணர்தல் அவசியமே
அன்புடன் நாளும் இரசித்து மகிழ்வோம்
அனுதினம் இயற்கையினை!
அலர்ஜியைத் தாண்டி
இயற்கையை இரசிக்கும்
இராம்ஸ் முத்துக்குமரன்.