தை தை என்றிட சிந்தை மகிழ்ந்திடும்
தை தை என்றிட விந்தை நிகழ்ந்திடும்
தை தை என்றிட தைரியம் வந்திடும்
தை தை என்றுமே தமிழரின் தனிபலம்,
தை தை என்பது உழவர்கள் உற்சவம்
தை தை என்பது அறுவடை அற்புதம்
தை தை என்பது தமிழிலே பொற்பதம்
தை தை என்றுமே தந்திடும் உற்சாகம்,
தை தை தமிழிலிலே ஒற்றெழுத்துச் சொல்லது
தை தை எனும்சொல்லில் மந்திரம் உள்ளது
தை தை தந்திடும் பொன்மஞ்சள் நெல்லது
தை தை வந்திட தொடர்ந்திடும் நல்லது,
தை தை என்று சொல்லிடும் பொழுது
தை தை என்று துள்ளிடும் மனது
தை தை என்பது பிரிந்ததை சேர்ப்பது - இன்று
தை தை வந்ததே பிரிந்தவர் சேர்ந்திட,
அத்தை மகளென நாணம் கொண்டின்று
அத்தை வந்தது ஆனந்தம் தந்திட
தத்தை தமிழ்மொழித் தரணியில் சிறந்திட
இத்தைத் திங்களில் சத்தியம் செய்குவோம்,
நித்தையில் இருந்தது போதும் விழித்திடு
நத்தையாய் நகர்ந்தது போதும் விரைந்திடு
ஒத்தையாய் இருப்பினும் தொடர்ந்து முயன்றிடு
வித்தைகள் கற்று வீறுடன் செயல்படு,
முத்தைப் போல முழுமதி ஒளிதர - பூங்
கொத்தைப் போல புவியது பொலிவுற - நல்
வித்தை விதைத்திடு இனியது வளம்பெற
சத்தை மிகுந்துநல் வாழ்வது நலம் பெற,
தையது பிறந்தால் தனிவழிப் பிறக்கும்
மெய்யது சிலிர்த்து புத்தொளி கிடைக்கும்
பொய்யது விரட்டி பொறுப்புடன் இருந்து - நம்பிக்
கையது கொண்டு நல்வழி நடப்போம்!
அனைவருக்கும்
இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்
அன்புடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.
*நித்தை - நித்திரை
*சத்தை - சாரம், வலிமை
*வீறு - சிறப்பு, வெற்றி, பெருமை
வித்தை - கல்வி, கலை
வித்து - விதை