(பாகம் - 1)
பூவாய்ப் பூத்துக் குலுங்கிடும்
அழகியத்
தீவாய் சிறந்து விளங்கிடும்
ஹவாய்!
ஹவாய்த் தீவில்
காலை வைத்ததும் - கடற்
காற்று வந்து கைக்குலுக்கியது - மலர்
வாசம் வந்து - நறு
மணம் பரப்பி
மனம் மயக்கியது!
வாய் என்று பெயரில் உள்ளதால்,
என்னைப் பார்த்து
ஹாய் என்று ஹவாய்
சொன்னதோ என
எண்ணத் தோன்றியது!
தீ வாய் மலைகளின்
எரிமலைக் குழம்பினால்
தீவாய் ஆனதோ
இந்த ஹவாய்?
விண்ணைத் தொட்டிடும்
வண்ணம் உயர்ந்த
கண்ணைக் கவரும்
கவின் மிகு மலையும்,
கண்ணை மூடி
திறந்திடும் முன்னே
என்னை முழுவதும்
நனைத்திடும் மழையும்,
எங்கு நோக்கினும்
பச்சைப் பசுமை
பொங்கும் அழகது
இச்சைத் தருமே,
நுங்கும் நுரையுமாய்
ஓடும் நீரும்
எங்கும் வீசும்
சுத்த காற்றும்
அங்கம் தழுவி
நச்சை விலக்கும்,
மங்கும் செயற்கை அழகுகள்
ஹவாயின் இயற்கை
பொங்கும் எழிலிடம்
பிச்சை எடுக்கும்!
ஏழ்கடல் சூழ்ந்ததே
எண் திசை மொத்தமும்
ஆழ்கடல் நடுவினில்
அழகிய சொர்க்கமே!
கடலது மயங்கி
காமம் கொண்டு
தனக்கென
வைத்துக் கொண்டதோ
இத் தீவினை?
எரிமலை வெடித்து
எதிரியாய் அழிக்குமோ
புரிந்தால் யாரும் இங்கு
தீ விணை?
ஆஹா ஒஹோ என
சொல்ல வைத்திடும்
அழகிய ஒவாஹு (Oahu),
காவியம் மேவிய
ஓவியத் தீவுதானோ
மாவியும் (Maui) ?
காய்ந்த மலைக் கொண்ட
சிவப்பாய்த் தெரியும்
இடங்கள் செவ்வாயோ - பச்சை
பாய் விரித்த பசுமை
பூந்தோட்டம் தான்
கவ்வாயோ? (Kaui)
ஒரு பக்கம்
எரிமலை,
மறுபக்கம்
பனிமலை
அர்த்த நாரீஸ்வரர் போன்றா
ஹவாய் தீவே உன் நிலை?
நியூயார்க்கை (New York) ஒட்டி வைத்ததார்
ஹானலூலூவில் (Honolulu) ?
வானுயர்ந்த கட்டடங்கள்
வானை முயன்று தொட்டிடுமோ?
பண்டைய கலாசாரங்களை மறக்கும்
இன்றைய இளைஞர்களை போல்
இயற்கை அழகை
மறைத்து நின்று வென்றிடுமா?
அதிகாலை கிழக்கில்
ஆதவன் உதயம்
அந்தி மாலை மேற்கில்
சூரியன் மறைவும்
ஒரே தீவில் இருந்து
பார்க்கின்ற வாய்ப்பு
இயற்கையின் படைப்பில்
இரசிக்க வைத்திடும்
இனியதோர் வியப்பு,
மனம்,
அலைகடல் கடந்து
இலையென மிதந்து - தங்கச்
சிலையாய் மின்னும்
கதிரவனைக் கைப்பற்ற எண்ணும்,
மலையேறி வலைவீசி
கலையாத சித்திரமாய்
தண்ணொளி வீசும்
நிலவைக் கவர்ந்திடவும் சொல்லும்!
முகில் கறுத்து
சட்டென மழை தூறும்
முகில கலைந்து
சட்டென நிலை மாறும்,
நாணம் கொண்டதோ வானமும்?
வானவில் தோன்றிடும் சில நொடி,
வானம் பெரியதோர் தொடுதிரையோ?
வண்ணக்காட்சிகள் மாறுதே மறுபடி,
ஹவாயின்
வானிலை மாறிடும் அடிக்கடி - அது
காதலி போல தந்திடும் ஒரு
நெருக்கடி!
வண்ணவண்ணப் பூக்கள்
கண்ணடிக்கும் நம்மைப் பார்த்து,
வாசம் வீசும் மலர்கள்
சுண்டி இழுக்கும் மனதையும்
மணம் சேர்த்து!
மலை முகட்டினை
முகில்கள் தழுவிட - மலை
தன்னிலை மறக்குதோ?
முகில் கொண்டு - தன்
மயக்கத்தை மறைக்குதோ?
தழுவிய முகிலது நழுவிட,
பிரிவின் துயரத்தில் அழுகுதோ?
அங்கங்கு வெண்ணிற
அருவிகள் கொட்டுதே,
எங்கெங்கும் காணும் அழகினில்
என்னிதயம் சொக்குதே!
இயற்கை இராணியின்
அழகினை இரசிக்க
இருவிழிப் பார்வை போதுமா?
இது
இயந்திர மனிதனின்
கண் கை கால் படாமல்
தப்பித்த மிச்ச மீதமா?
பாகம் - 2 படிக்க/பார்க்க... இங்கே சொடுக்கவும்
இயற்கை அழகில் மயங்கி
இராம்ஸ் முத்துக்குமரன்.