(பாகம் - 2)
பாகம் - 1 பார்க்க/படிக்க... இங்கே சொடுக்கவும்
'லெய்' (Lei) என்ற மாலை சூட்டி
வரவேற்றது ஹவாய் என்னை,
மெய் மறந்து அழகில் மயங்கி
இமைக்க மறந்தேன்
நானும் கண்ணை,
அலைகள் வந்து பாதம் தழுவி
'அலோஹா' (Aloha) என்றது
என்னைப் பார்த்து,
தென்றல் வந்து மெல்ல வருடியது - கடற்
கரையின் குளுமை சேர்த்து!
மலை முகட்டு நடுவினில்
தெறிக்கும் தீப்பொறி,
மலர் கூட்டத்தில் வழிந்திடும்
இனிக்கும் தேன்துளி,
புற்களின் நுனியினில்
சிரித்திடும் பனித்துளி,
விருந்தென அருந்துதே
இரசித்திடும் என்விழி!
ஓங்கி வளர்ந்த
மூங்கில் கூட்டம்
காற்றோடு சேர்ந்து
புல்லாங்குழலாய் மாறும்,
தூங்கி கிடக்கும் - உயி
ரினங்களை எழுப்ப
வான்மழை இதமாய் தூறும்
மலையுச்சியைக்
காணும் பொழுது,
அதன் சரிவினில்
சரிந்தது வயது - அழகிய
பள்ளத் தாக்கினைக்
கண்ட பொழுது - அதில்
விழுந்து
தொலைந்தது மனது!
சிற்பிகள் போல
பாறையில் சிற்பங்கள்
அலைகள் செதுக்குதே
நீரினைக் கொண்டு,
கறுப்பு சிவப்பு
வெள்ளை என்று - கடற்
கரை மணலிலும் - பல
வண்ணங்கள் உண்டு,
கண்ணாடிப் போன்ற
படிக நீரைக் கண்டேன் - அதில்
என்னையே கண்டு
இரசித்து நின்றேன்!
ஹவாயின் எல்லையான
கவ்வாய்த் தீவில் - கண்டேன்
எல்லையில்லா பரம்பொருளாம்
ஈசனின் கோவில்,
மன மயக்கும் அதன்
தோற்றம் கண்டு,
மன மகிழ்ந்தேன் - ஒரு
மாற்றம் கொண்டு,
அங்கு
வில்வ மரத்தைக் கண்டு
வணங்கினேன்
வில்வ இலைகள் கொண்டு,
செழித்து வளர்ந்த
உருத்திராட்ச்சை
மரங்கள் கண்டேன்,
அவன் அருளாலே
அழகிய உருத்திராட்சைகளை
கரங்களில் ஏந்திக்கொண்டேன்,
அமைதியான
அழகியத் தீவில் - மன
அமைதியைத் தந்திடும்
இறைவன் கோவில்,
ஏதோ ஒன்று
என்னை மீண்டும் வா என்றது
ஏதேதோ எண்ணங்கள்
மனதில் தோன்றுகின்றது!
ஹவாயில்,
கனலும் உண்டு
அனலும் உண்டு
கானகம் முழுவதும்
புனலும் உண்டு,
வெயிலும் உண்டு
மழையும் உண்டு
வேட்கைத் தந்திடும்
வசந்தம் உண்டு,
குயிலும் உண்டு
கிளியும் உண்டு
நாட்டியம் ஆடிடும்
மயிலும் உண்டு,
தேனும் உண்டு
மானும் உண்டு
தெவிட்டாத
இன்பம் உண்டு,
ஆலும் விழுதும்
அதிகம் உண்டு - எந்
நாளும் விளையும்
தென்னையும் உண்டு,
அருவியும் உண்டு
குருவியும் உண்டு
அடலேறு ஆடு
புரவியும் உண்டு,
சாலையில் திரியும்
கோழிகள் உண்டு
சோலையில் மேயும்
மாடுகள் உண்டு,
வயலும் உண்டு
வரப்பும் உண்டு
மா வாழை - நிலம்
முழுவதும் உண்டு,
காப்பித் தோட்டமும் உண்டு - பைன்
ஆப்பிள் பண்ணையும் உண்டு
தோப்புந் துரவும் உண்டு
தொன்மை சாரமும் உண்டு,
கரும்பும் உண்டு
அரும்பும் உண்டு
ஹவாயை மனது
விரும்பும் என்றும்,
நாவல் பழமும் கண்டேன்
ஆவல் அதிகம் கொண்டேன்
முருங்கைக் காய்த்திட கண்டேன்
வெறுங்கையோடவா நிற்பேன்?
தெய்வத் திரவியம் கண்டேன்
சைவத் துறவியும் கண்டேன்
வைகறை அந்தி இரவு என்று
ஹவாயின் அழகில்
மையல் நானும் கொண்டேன்,
ஐவகை நிலங்களும்
ஹவாயில் கண்டு
அடடா நம் தமிழகமோ - என
ஐயம் கொண்டதுண்டு,
ஆதிக் குடிகளும் உண்டு
ஆதிக்க சக்தி
ஆக்ரமித்த கதைகளும் உண்டு,
யுத்தத்தின்
கோர முகமும் உண்டு
மொத்தத்தில்
இந்தியா போலவே இங்கும்,
சுற்றி சுற்றி நானும் வந்து
நினைத்துக் கொண்டேன்
ஒருவேளை இந்தியா தானோ
இதுவும் என்று!
பாம்பு மட்டும்
இங்கு இல்லை - அதனால்
பயமும் எனக்கு
இங்கு இல்லை,
வாய் மட்டும் அல்ல
வார்த்தைகளுக்கும்
வலிக்காமல் இவர்கள் பாடும்
பாட்டு இனிமை,
தீயோடு விளையாடும்
ஆண்களின் வீர
விளையாட்டு வலிமை,
விடை அறியா முடியாத
கதை பேசும் நங்கையர் நயனம்,
உடை மறைக்கா திடை ஆடும்
மெல்லிய நடனம் நளினம்,
தீவுகளில்
ஹவாய் ஒரு புதினம்
அதன் நினைவுகள்
தீவாக மனதில் இருக்குமே
அனுதினம்!
அழகு இருந்தால்
ஆபத்தும் உண்டு
அழகுக்கு அதுவே தன்மை,
அழகு கொஞ்சும் ஹவாயிலும்
அதுவே கண்ட உண்மை,
சுற்றியும் சமுத்திரம்
சுனாமி வரலாம்,
எரிமலை வெடித்தால்
எரிந்து விடலாம்,
பூகம்பம் வந்து
புரட்டிப் போடலாம்,
புயல்மழையாலே
இயல்புநிலை மாறலாம்,
இயற்கையின் படைப்பில்
என்றும் பாரபட்சம் இல்லை,
இதை உணர்ந்து கொண்டால்
வாழ்க்கையில் ஏமாற்றம் இல்லை,
எல்லாவற்றிலும்
இன்பமும் இன்னலும் உண்டு
இதை அறிந்து கொண்டால்
வாழ்வில் என்றும் நிம்மதி உண்டு!!!
இயற்கை அழகில் மயங்கி
இராம்ஸ் முத்துக்குமரன்.