(உ.வே. சாமிநாத ஐயர் * பிப்ரவரி 19, 1855 - ஏப்ரல் 28, 1942)
தமிழே, தமிழன்னையே,
உன்னைக் காத்து
உன் பெருமையை மீட்டெடுத்து,
பத்திரமாய் எங்களுக்குத்
தந்து சென்றாரே
எங்கள் தமிழ்த் தாத்தா,
அவரை மீண்டும் ஒருமுறை
எங்களுக்குத் தா தா தா!
உயிராய் உன்னை நேசித்தார் - உயிர்
மூச்சாய் உன்னை சுவாசித்தார்
தமிழ் இலக்கியம் அனைத்தையும்
தேடித்தேடி வாசித்தார்,
தெய்வமாய்ப் போற்றிப் பூசித்தார்,
அத்தனை நூலையும் பாடுபட்டு
அச்சிலே ஏற்றிப் பாதுகாத்தார்,
முத்தமிழ் காத்தவர் நம் தமிழ்த் தாத்தா - அவரை
மெச்சிட ஒருமுறை
மீண்டும் எங்களுக்குத் தா தா தா!
ஓலைச் சுவடிகள் ஒவ்வொன்றாய்
தேடித் தேடிச் சேகரிக்க
காலம் நேரம் பார்க்காமல்
பாதம் தேயப் பாடுபட்டார்
ஒற்றை ஆளாய் ஓய்வின்றி - தமிழ்த்
தாய்க்குத் தன்னை அர்ப்பணித்தார்,
தன்னலம் கருதா தமிழ்த் தாத்தா - தமிழ்
அன்னையே அவரை
மீண்டும் எங்களுக்குத் தா தா தா!
சாதி வெறுப்பையும் தாண்டி வந்து
சாதித்துக் காட்டினார் தனித்து நின்று - அந்நிய
ஆதிக்க அரசின் அடக்குமுறையால்
பாதிக்கப்பட்டும் தன்பணி முடித்தார்,
தேதி கிழமைப் பார்க்காமல்
வீதி வீதியாய் நடை நடந்து
ஆதி தமிழை அரவணைத்து
சோதிப் பிழம்பாய் ஒளிரவைத்த
வேதியர் எங்கள் தமிழ்த் தாத்தா - அவரை
மீண்டும் எங்களுக்குத் தா தா தா!
தமிழின் இனிமையை உணர்ந்ததாலே
தமிழ்த்தேனை எடுக்கும் வண்டானார் - தேன்
கூடென சுவடிகள் சேகரித்தார்
நாம் பருகிட முழுவதும் விட்டுச்சென்றார்,
தமிழைத் தாயாய்ப் போற்றுகின்றோம் - ஒரு
தாய் மக்களாய் நாம் இன்று - அந்த
தமிழுக்குத் தாத்தா இவரென்றால்
தமிழ்த்தாய் நிச்சயம் மகிழ்ந்திடுவாள்,
தமிழ் உள்ளவரை அவரே தமிழ்த் தாத்தா - அந்த
நல்லவரை மீண்டும் எங்களுக்குத் தா தா தா!
மனதில்
உவேசா என்பதை அச்சடித்து - நிதம்
நாவது மகிழும் உச்சரித்து - அவர்
சேவைக்கு ஈடில்லை எப்பரிசும்
கண்ணாய் அதை
பாவித்து காப்பது நம் பொறுப்பு - தமிழ்
காவியமெல்லாம் கண்டெடுத்து
சாவினில் இருந்து அதை தடுத்து - புதுப்
பூவினைப் போல மலர வைத்து - தனித்
தீவென நமக்கு விட்டுச் சென்றார் - தமிழ்
ஓவியம் என்றுமே தமிழ்த் தாத்தா - அவரை
சேவிக்க வேண்டும் ஒருமுறை தா தா தா!
தமிழன்னையின் தவப் புதல்வன்
தமிழுக்கு என்றுமே அவர் முதல்வன்
உருவத்தில்
நெடிதுயர்ந்து இருந்த அக்கிழவன் -
நம் உள்ளத்தில்
நெடிலென உயர்ந்த தமிழ்ப் புலவன்,
மன்னராய்
இல்லாத போதும் அவர் வளவன் - நம்
மனதை வென்றுவிட்ட ஒரு வலவன்
தமிழ் நூல்களை
அறுவடை செய்துதந்த பெரும் உழவன்
தமிழ்த் தேரை
நிலை சேர்த்த புகழுறு மழவன்
தமிழுக்கு என்றுமே உவேசா தமிழ்த் தாத்தா
தமிழன்னையே மீண்டும் அவரை தா தா தா!
தமிழக மெங்கும் தனியாய் அலைந்து,
தமிழ் நூலால்
வாடாத அழகிய மாலைக் கட்டி,
தமிழ் மணம் மனம் நுகர
விட்டுச் சென்றார்,
இன்றைய தமிழர் குணமோ -
தமிழின் நறுமண மதை மறந்து - அந்நிய
நெடிதனை வாசமென நுகர்ந்து
விரும்புதே அடடா என வியந்து,
வெறும் அரும்பினை மலரென
உளம் மகிழ்ந்து,
மாறுமோ அவர் மனம் தவறுணர்ந்து
போற்றுமோ நம்மொழி தனை புகழ்ந்து?
தமிழ் மணம் பரப்பிய தமிழ்த் தாத்தா - அவரை
தமிழர் மனமறிய மீண்டும் தா தா தா!!!
அன்புடன் என்றும்
தமிழ்த் தாத்தாவை மறக்காத
இராம்ஸ் முத்துக்குமரன்.
-------
வளவன் - சோழ அரசன்
வலவன் - திறமையுடையவன், வெற்றியாளன்
மழவன் - இளைஞன், வீரன், அஞ்சாதவன்