தாயின் பாசம் தெரிகிறது
தாயின் நேசம் புரிகிறது
தாயின் வாசம் வருகிறது
தாயின் சுவாசம் தருகிறது
எங்கள்
அம்மா கட்டிய சேலை...
நினைவுகள் பல
அள்ளித் தருகிறது
துணையென கதைகள்
சொல்லி வருகிறது
அம்மா கட்டிய சேலை...
தொட்டில் கட்டி ஆடியது
ஊஞ்சல் ஆக்கி விளையாடியது
மெத்தையாய் மாற்றித் தூங்கியது
மொத்தமும் நினைவில் தேங்கியதே
அம்மா கட்டிய சேலை...
அப்பா திட்டியதாலே
அழுதிட வழிந்த கண்ணீரைத்
அன்பாய்த் துடைத்திந்த
அம்மா கட்டிய சேலை...
அந்நியர் யாரும் வந்தால்
ஓடிச்சென்று ஒளிந்துக் கொண்டு
அச்சப் பட்டு நின்றதிந்த
அம்மா கட்டிய சேலை...
முந்தானை முனையெடுத்து
முகத்தை மறைத்துக் கொண்டு
வந்தோரை எட்டிப் பார்த்து
வணக்கம் சொல்ல வைத்தது
அம்மா கட்டிய சேலை...
மழையில் நனைந்தால்
தலையைத் துவட்டிடும்
கலை மிகுந்த அழகிய
எங்கள்
அம்மா கட்டிய சேலை...
வேலையில் மூழ்கி
வியர்வையில் நனைந்த பின்னும்
வியர்வை மணம் வராமல்
உழைப்பின் மணம் வீசிய அதிசயம்
எங்கள்
அம்மா கட்டிய சேலை...
அழுக்குச் சேலையும்
அழகாய்த் தெரிந்திடும்
இழுக்கு இல்லை
இளக வைத்திடும்
அம்மா கட்டிய சேலை...
தாலாட்டுப் பாடி உறங்க வைத்த
தாலாட்டும் அனுபவம் தருகிறது
தலைக்கு வைத்துப் படுத்தால்
இன்று
அம்மா கட்டிய சேலை...
தாயின் அரவணைப்பின்
வெதுவெதுப்பு தரும்
தரையில் விரித்துப் படுத்தால்
குளிருக்கு இதமாய்
அம்மா கட்டிய சேலை...
அழுதிடும் குழந்தையும்
உறங்கிடும் சுகமாய்த்
தொட்டில் கட்டி ஆட்டினால்
எங்கள்
அம்மா கட்டிய சேலை...
மனம் கனத்து
வலி மிகுந்து
தனித்திருந்து
தவித்திருக்கையில்
மயிலிறகாய் வருடும்
என்றும்
அம்மா கட்டிய சேலை,,,
கிழிந்த பின்னும்
அழியாது என்றும்
பொக்கிஷம் ஆகிடும்
அழகாக அன்றும்
எங்கள்
அம்மா கட்டிய சேலை...
சாயம் போனபின்னும்
சாயம் போகாது மின்னும்
மாயம் காட்டுதே
நேயம் கூட்டுதே
எங்கள்
அம்மா கட்டிய சேலை...
இது
ஆயா சேலை
அப்பத்தா சேலை என
நவீன பேத்திகளை
ஆசையாய்ச் சேலை
உடுத்திட வைக்கும்
எங்கள்
அம்மா கட்டிய சேலை...
அன்னையின்
திருமணத்து அன்றைய
நறுமணம் வீசுதே
அறுபது ஆண்டுகள்
கடந்து இன்றும்
எங்கள்
அம்மா கட்டிய சேலை...
அடுத்தவர் எடுத்ததை
உடுத்திடும் பொழுதினில்
அவர்களில் காண்கிறேன்
அன்னையை அழகாய்
அம்மா கட்டிய சேலை...
அம்மா கட்டிய சேலையும்
அம்மன் கட்டிய சேலையும்
இன்று காணும் பொழுது
ஒன்றாய் அல்லவா தெரிகிறது
அம்மா கட்டிய சேலை...
ஒவ்வொரு வண்ணச் சேலையும்
ஒவ்வொரு எண்ணச் சோலையாய்
ஒவ்வொரு நாளும் மலரும்
எவ்வாறு மறக்க இயலும்
எங்கள்
அம்மா கட்டிய சேலை...
மண்ணை விட்டுப் பிரிந்தாலும்
விண்ணைச் சென்று அடைந்தாலும்
என்னை விட்டுப் பிரியாது - என்
அன்னை கட்டிய சேலை
கண்ணை விட்டு மறையாது
எங்கள்
அம்மா கட்டிய சேலை!!!
அம்மாவின் நினைவுகளுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.