(காஷ்மீர் - ஏப்ரல் 22, 2025)
அன்று மும்பை
நேற்று புல்வாமா
இன்று பகல்காம்
என்று தீரும்
இந்தத் தீவிரவாதிகளின்
இரத்தத் தாகம்?
அப்பாவி மனித உயிர்களைக்
கொன்றுக் குவிப்பது
இவர்களுக்கு
அலுக்கவே அலுக்காதா?
இந்த தொடர் கொலைவெறிக்கு
முற்றுப்புள்ளியே கிடையாதா?
சுதந்திரம் அடைந்த பின்னரும்
விடுதலை கிடையாதா?
எல்லோரையும் கொன்றபின்
கொல்லுவதற்கு
அவர்களைத் தவிர
யாரும் இருக்கமாட்டார்களே
அப்பொழுது என்ன செய்வார்கள்
இந்த மனிதம் மரித்த
மாபாதகர்கள்?
மதம் மதம் என்று
மதம் பிடித்தவர்களின்
மதம்
கற்றுக்கொடுப்பது
இதை தானா?
வேற்று மதத்தவரை
வெறுத்து வேரறுக்கும்
வெறியும் கொடூரமும்
எங்கிருந்து வந்தது?
எங்கு கொண்டு
செல்லும் அது?
இலட்சியத்திற்குப் போராடலாம்,
இலட்ச இலட்சமாய்
கொன்று குவிப்பதே
இலட்சியமாய் கொண்டிருப்பது
போராட்டம் அல்ல - அது
விகார மனம் கொண்டோரின்
வெறியாட்டம் அல்லவா?
காட்டு விலங்குகள் கூட
இரைக்காகத் தான்
வேட்டையாடும் - இந்தக்
காட்டு மிராண்டிகளோ
இறைக்காக
ஈவு இரக்கமின்றிக்
கொன்று அழிக்கிறார்கள் - அதைக்
கண்டு மகிழ்கிறார்கள்!
கொன்று புசிக்கும்
விலங்குகளை விட
கொன்று இரசிக்கும்
இவர்கள்
கேவலமானவர்கள்!
இந்த
ஈனப் பிறவிகளைக்
காட்டு விலங்குகளோடு ஒப்பிட்டால்
காட்டு விலங்குகளுக்கு கூட
கோபம் வரும்!
இயற்கையை இரசிக்க வந்த
அப்பாவிளைக் கொல்லுகின்ற
இரக்கமில்லாத
அரக்கக் கூட்டத்தினரால்
இரவில் எப்படி
உறங்க முடிகிறது?
பெற்ற மகனை
கட்டியக் கணவனை
வளர்த்த தந்தையை - கூடப்
பிறந்த சகோதரனை,
கண் முன்னே
மனிதாபிமானம் இன்றி,
நெற்றிப் பொட்டிலும்
செவிகள் வழியாகவும்,
சுட்டு மகிழும் கொடூரம்
கொடுமையிலும் கொடுமை!
நினைத்துப் பார்த்தாலே
நெஞ்சம் பதறுகிறதே
நேரில் பார்த்தவர்கள் மனம்
என்ன வதைபடுமோ?
படு பாதகம்
நிகழ்ந்த அந்த ஒரு கணம் - இனி
வாழ்நாள் முழுதும்
தருமே என்றும் பெரும் இரணம்!
இரத்தத்தைக் குடிக்கும்
இரத்தக் காட்டேரிகளை
கற்பனைக் கதைகளில்
கேட்டிருக்கிறோம் - இன்று
கண் கூடாகவே
கண்டு கொண்டோம்!
இயற்கை ஆறு
ஓடும் இடத்தில்
இரத்த ஆறு
ஓடுகிற அவலம் ஏன்?
பனி கொஞ்சும்
மலை நிலத்தில்
உயிர் கெஞ்சும்
நிலை ஏன்?
புனிதமான பாரதத்தில்
மனிதம் கொல்ல
ஓரறிவில்லா
மிருகங்களுக்கு
துணிவு வருவது எப்படி?
எல்லை தாண்டி வந்து தாக்குவது
என்னவொரு ஆணவம் - அந்த
வெறி நாய்களை
வேட்டையாடி கொல்ல வேண்டாமா
என்ன செய்கிறது நம் இராணுவம்?
எல்லைத் தாண்டி யாரும்
வரவில்லை என்றால்
உள்ளே ஒளிந்து இருக்கும்
துரோகிகளை
இனம் கண்டு
தோலுரிக்க வேண்டும்,
சினம் கொண்டு
வேரோடு அழிக்கவேண்டும்!
தீவிரவாத தாக்குதல்களுக்கு
கண்டனம் தெரிவிப்பது
என்ன பயன் தரும்?
தீவிரவாத செயல்களுக்குத்
தண்டனை கடுமையானால் தானே
பயம் வரும்?
நாசம் விளைவிக்கும்
தேச விரோத
நீசர்களிடம்
நேசத்தை எதிர்பார்க்கக் கூடாது?
அவர்களின்
வேசத்தைக் கலைத்து
வெளியேற்ற வேண்டும்
அல்லது
கழுவேற்ற வேண்டும்!
தீவிரவாதத்தை
ஊக்குவிக்கும் நாடுகளுடன்
சமாதானம் ஏன்?
குண்டு மழை பொழிந்ததைக்
கண்ட பின்னும் இன்னும்
வீண் தாமதம் ஏன்?
தூதரக உடன்படிக்கைகள் - இனி
தேவையில்லை
தீவிர நடவடிக்கைகளே - அவசரத்
தேவை இன்று!
பலம் பொருந்திய நாடு
என்று கூறி மகிழ்வதை விட
பலம் என்னவென்று செயலில்
காட்டி வெல்வதே மேல்!
புண்ணிய பூமி என்று
கண்ணியம் காத்தது போதும்,
அந்நிய எதிரிகளின்
மென்னியைத் திருகி
கொன்றுக் குவித்திட வேண்டும்!
ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீர்
என்பது
இந்தியாவிற்கு அவமானமாகும்,
மீட்கப்பட்டு காஷ்மீர்
மீண்டும்
முழுமையாவது தான் - இரத்தம்
சிந்தியவர்களுக்கு நாம்
செய்யும் வெகுமானமாகும்!
அகிம்சையால் பெற்ற
இம்சைகள் போதும்,
அராஜகத்தை துணிந்து
துவம்சம் செய்யவேண்டும்,
சாது கூட வெகுண்டால்
சாபம் கொடுப்பார்,
நம்மோடு
மோதும் பகைக்கூட்டத்தை - இனி
மேலும் பொறுத்திடாமல்
மோதி ஜெயிக்க வேண்டும்!
தீங்கு நினைப்பவர்களை
ஓங்கி அடித்து அழிக்க வேண்டும்
தீக்கங்கு குழம்பு போல
ஓடி எரித்துப் பொசுக்க வேண்டும்!
காஷ்மீரத்தில் எதிரிகள் - இனி
கால் வைக்கக்கூட
நினைத்துப் பார்க்கக் கூடாது
காஷ்மீரத்தின் எழில் சிறிதும் - இனி
பாழ்பட்டுக் கறை
படிந்து விடக் கூடாது!
நின்று கொல்லும் தெய்வம்
நின்று கொல்லட்டும்,
அன்று கொல்லும் அரசன்
அன்றே கொல்லவேண்டும்
இன்றே கொல்லவேண்டும்!
தீவிரவாதத்தை தீவிரமாக
அழித்து ஒழிக்க வேண்டும்
பொறுத்தது போதும்....
கண்டனங்களுடனும்
கனத்த இதயத்துடனும்
இராம்ஸ் முத்துக்குமரன்.