Chidhambaram Natarajar Temple

சமூகம்

Covid 19 virus

வைரஸ் எனும் வைரியே...

எங்கும் கொரோனா மயம்
எங்கும் கொரோனா பயம்!

கண்டம் விட்டு
கண்டம் தாவித் தாக்கும்
ஏவுகணைகள்,

கண் சிமிட்டும் நேரத்தில்
கணக்கில்லாத் தோட்டாக்களால்
எதிரிகளையும்
எதிரில் இருப்பவரையும்
சுட்டுப் பொசுக்கிக்
கொன்றுக்குவிக்கும்
இயந்திர அழிப்பான்கள்,

அந்நிய நாட்டை
அரை நொடியில்
அழித்துவிடும்
ஆற்றல் கொண்ட
அதி நவீன
அணு ஆயுதங்கள்,

மடை திறந்த வெள்ளமாய்
பாய்ந்து
தடை தகர்த்து
நடைப் போடும்
படைப் பரிவாரங்கள்,

விண்வெளிக்குச் சென்று
வேற்று கிரகத்தை
ஆராய்ந்து
மாற்று இடம் தேடுமளவிற்கு
வியக்க வைக்கும்
விஞ்ஞான வளர்ச்சி,

விரிந்து பரந்த
உலகத்தை
விரித்த உள்ளங்கையில்
அடக்கி
ஆட்டிவைக்கும்
கணிப்பொறி கருவிகள்,

ஆளில்லாமல்
இயங்கும் வாகனங்கள்
ஆளில்லாமலேயேப்
பறக்கும் விமானங்கள்,

உறுப்புகளை மாற்றிப்பொருத்தும்
அதிசயங்கள்,
அறுவைசிகிச்சை செய்யும்
இயந்திரங்கள்,
இன்னும்
மருத்துவத் துறையில்
மகத்தான பல
கண்டுபிடிப்புகள்,

இத்தனை இருந்தும்,

கண்ணுக்குத் தெரியாத
நுண்ணணுகிருமிகள்,
மண்ணுலகையே
மிரள வைத்து
அலற வைத்ததின்று!

யானை காதுக்குள்
புகுந்த எறும்பாக
பாரையே பயமுறுத்தி
பதை பதைக்க வைக்கிறது
பயங்கரமாய்!

அலறும்
வளரும் நாடுகள்,
கலங்கும்,
வளர்ந்த நாடுகள்,
வல்லரசுகளுக்கும் இல்லை
பாதுகாத்திடும் கேடயம்,
எவ்வரசுகளுக்கு இல்லை
எதிர்த்து நிற்கவோர் ஆயுதம்!

எல்லைக்கோடுகள்
கொண்ட நாடுகள்,
ஒருத்தரை ஒருத்தர்
தள்ளி வைக்கின்றன
தப்பிக்க வேண்டி,

உலகப் பொருளாதாரத்தையே
உருட்டி விளையாடுகிறது
உருவமில்லாத ஒன்று!

உருவம் தெரியும்
எதிரியை
உருத்தெரியாமல்
அழிக்கின்ற மனிதன்,
உருவமற்ற
அருவமான கிருமியிடம்
கர்வம் தொலைத்தான் இன்று!

காற்றலையில்
தகவல் அனுப்பி
எல்லைகளே இல்லையெனக்
காட்டிய மனிதனுக்கு,
அதே காற்றில் பரவி
தொல்லைத்தந்து உயிரைக்
கொள்ளையடிக்கிறது
கொரோனா இன்று!

கை நீட்டி
கட்டிப்பிடித்து
வரவேற்றவர்கள் - இன்று
ஆறடி
எட்டி நின்று
கைக் கூப்பி அருகே
வர மறுக்கிறார்கள்,

பொய் முகமூடி
அணிந்து திரிந்துகொண்டிருந்த
மனிதன் இன்று
மெய் முகமூடி
அணிந்து வருந்தவேண்டிய
நிர்பந்தம்!

அடுத்த வீடே
அந்நியமாகிப் போன
பல மனிதர்களுக்கு,
தன் வீடே
சிறையாகிப்
போனதின்று!

இருமினால்
கிருமி வரும்,
தும்மினால்
துன்பம் தரும்,
என
அஞ்சி நடுங்கிட
வைத்ததின்று,
நெஞ்சு கலங்குதே
நிலையைக் கண்டு!

சத்தமில்லாமல்
அழிக்கும் ஒரு
யுத்தமிது,
சுத்தம் மறந்ததால்
நிகழ்ந்த ஒரு
குற்றமிது!

பறவையிலிருந்து வந்ததா?
தெரியவில்லை,
விலங்கிலிருந்து வந்ததா?
விளங்கவில்லை,
இன்று
மனிதனுக்கும் வந்துவிட்டது,
குணப்படுத்த ஒரு
மருந்து இல்லை,
கவனம் சற்றுக் கொண்டிருந்தால்
தடுத்திருக்கலாம் பல மரணங்களை
இந்த துயரம் இல்லை!

எதிலிருந்து வந்ததிது
என்று
ஆராய்ச்சி செய்வார்களா?
இல்லை,
அடுத்தவரை அழிக்க
ஆராய்ச்சி செய்ததால்
வந்த வினை என்று
யாராச்சும் சொல்வார்களா?

ஒவ்வொரு காலகட்டத்திலும்
ஒவ்வொரு பேரிடர்களாய்
உணர்த்துகின்றன,
மனித வாழ்க்கை
நிரந்தரமற்றது என்று,

உலகில்
வாழும் நாட்கள்
கொஞ்சம் - அதில்
அன்பால் நிறையட்டும்
நெஞ்சம்,
அன்பு கருணை மறந்து
வன்மம் வெறுப்புக் கொண்டு
சண்டையிட்டு
சாதிப்பது தானென்ன?

யார் பெரியவன் என்று
சண்டையிடும் நமைக் கண்டு
வாய்விட்டு சிரிக்கிறது,
உலகையே பதறவைத்த
அணுவை விட
ஆயிரம் மடங்கு சிறிய
வைரஸ் இன்று!

உருவம் கண்டு எள்ளாமை,
உணர்ந்ததின்று
உலகம் அந்தக் கல்லாமை!

வையகத்தை வருத்துமிந்த
வைரஸ் வைரியை,
வைராக்கியத்துடன் அழித்திடுவோம்
வைத்தியம் கொண்டு!

இனி
சுத்தம்
சுகாதாரம்
ஒழுக்கம் கொள்வோம்,
நித்தம்
நலமோடு
நோயினை வெல்வோம்!

நம்பிக்கையுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

Chandrayaan 2

தொட்டு விடும் தூரம் தான்...

நல்ல புத்தாண்டே வா...

Tharuthalai Kadhal

தறு(ஒரு) தலை காதல்

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net