Chidhambaram Natarajar Temple

சமூகம்

நல்ல புத்தாண்டே வா...

பல இலட்ச உயிர்களைக்
கொன்ற வருடமே - புவியினைப்
பாடாய்ப் படுத்தி
சென்ற வருடமே
கரும்புள்ளியாய் சரித்திரத்தில்
நின்ற வருடமே
இனிமேலும் வேண்டாம் - 2020
என்ற வருடமே!

நன்மை தரும்,
புத்தாண்டே வருக
புத்துணர்ச்சி தருக
பித்தான மனதை
முத்தாக்கி விடுக,

புது மகிழ்ச்சி தந்திடும்
புது புனலாய் வா - வெண்
புரவிதனில் ஏறி
புறப்பட்டு வா,

புயல் மழையாய்
புவியெங்கும்
சீரழிந்தது போதும்
பூ மழையாய் - நறு
மணம் பரப்ப
புது வசந்தமே வா,

காட்டுத் தீயும்
கடும் வறட்சியும்
பூகம்பமும் போதும்
காட்டு கொஞ்சம்
கருணை எமக்கும் - அரும்
பூம்பொழிலாய் வா,

வஞ்சம் கொண்டு
வாட்டி வதைத்த
வஞ்சனைகள் போதும்
நெஞ்சம் நிறைந்து
துஞ்சி மகிழ
பஞ்சணையாய் வா,

விபரீதங்களும்
விபத்துகளும் சூழ்ந்த
வினோத ஆண்டே போ(தும்)
விடாமுயற்சி கைகொடுக்க
விரும்பியது கைகூட
வியத்தகு வண்ணம் வா,

இயந்திர வாழ்வில்
பயமின்றி சிறிதும் - எம்மால்
இயற்கை அழிந்தது போதும்
சுயநல மனிதன்
சுயமாய் திருந்த
நயமாய் நீயும் வா,

நாங்கள்
போற்ற மறந்த
புவியில் நடந்த
சீற்றமெல்லாம் போதும் - நல்
மாற்றம் கண்டிட
ஏற்றம் கொண்டிட
ஊற்றாய் பொங்கி வா,

சுற்றுச் சுழலை
சற்றும் மதிக்காது - இழைத்த
குற்றமெல்லாம் போதும்
பற்றுவைத்து எம்மேல்
பாரைக் காத்திட
உற்ற துணையாய் வா,

அருவ அரக்கனாய்
அகிலம் அழிக்கும்
அஞ்ஞானம் எல்லாம் போதும்
விஞ்ஞான மமதையால்
மெய்ஞ்ஞானம் மறந்த - மனிதனின்
அகந்தை அழித்திட வா,

கொள்ளை நோயால் - உயிர்கள்
கொள்ளை போன
கொடுமைகள் எல்லாம் போதும்
வெள்ளை மனதுடன்
பிள்ளைச் சிரிப்புடன்
உள்ளம் உவந்திட வா,

கண்ணுக்குத் தெரியா
கிருமியால் இழந்த
இன்னுயிர் எல்லாம் போதும்
தன்னுயிர் தந்து
மண்ணுயிர் காக்கும்
மனங்களை வாழ்த்த வா,

எதிர் வினையாற்றி
நல்வினை உணர்த்தி
எச்சரித்தது போதும்
எவ்வினையாயினும் - அது
நல்வினையாய் இருந்திட - அன்பாய்
எடுத்துச் சொல்லிட வா

ரௌத்திரமாக
தரித்திரம் பெருகி - உயிர்கள்
மரித்தது எல்லாம் போதும் - புவி
சிரித்து மகிழ்ந்திட - புது
சரித்திரம் படைத்திட - ஆர்
பரித்து அலையென வா,

சாதி மத இன
மோதல்களால்
பாரழிந்தது போதும்
யாதும் ஊரே
யாவரும் கேளிர் என
ஓதி உணர்த்திட வா,

வெற்றுப் பேச்சினால்
கற்று உணராமல்
ஒற்றுமை இழந்தது போதும்
தொற்று நோய்களும் - பல
புற்று நோய்களும்
முற்றும் ஒழித்திட வா,

உடலும் மனமும்
உற்சாகம் இழந்து
உழன்றது எல்லாம் போதும்
உணவு முறையும்
உடல் அக்கறையும்
உணர்த்திட உடனே வா,

உதிரிப் பூக்களாய்
உறவுகள் எல்லாம்
தனித்திருந்தது போதும்
குடும்பங்கள் எல்லாம் - வண்ண
கதம்பமாய் இணைந்து
இனித்து மகிழ்ந்திட வா,

நேசம் மறந்து
நெருப்பாய் எரிந்த
வெறுப்புகள் எல்லாம் போதும்
அன்னையைப் போல
அன்பைச் சொரிந்து - அர
வணைத்திட ஆசையாய் வா,

சாது மிரண்டால்
காடு கொள்ளாது - மனிதனின்
சூதும் தீதும் போதும் - புவி
வேதனை அகன்றிட - பல
சாதனைப் புரிந்திட - நல்
வேதம் பகன்றிட வா,

யார் எங்கு சென்றாலும்
யார் என்று தெரியாமல்
அல்லல் பட்டதெல்லாம் போதும்
ஊரடங் கில்லாத
பாரொன்று பாரென்று
பரவசம் கொண்டிட வா,

புரியாத மனிதர்களால்
புண்பட்டு புரையோடி
புவி பொலிவிழந்தது போதும்,
புன்னகைப் பூத்து
புடம் போட்ட தங்கமாய்
புத்தாண்டே பூரிப்புடன் வா,

இது வரை
தீராத வலிகள் தீரட்டும்
ஆறாத காயங்கள் ஆறட்டும்
மாறாத மனங்கள் மாறட்டும்
வாராத வசந்தம் பூக்கட்டும்.
இனிமேலாவது
பாராத விழிகள் பார்க்கட்டும்
சேராத உள்ளங்கள் சேரட்டும்
கூறாத இன்சொல் கேட்க்கட்டும்
நேராத நன்மைகள் நேரட்டும்,

நன்மை தரும்,
புத்தாண்டே வருக
புத்துணர்ச்சி தருக
பித்தான மனதை
முத்தாக்கி விடுக!

 

நம்பிக்கையுடன்

இராம்ஸ் முத்துக்குமரன்.

தொடர்புடைய கட்டுரைகள்

சித்திரையே வருக...

சித்திரையே வருக...

Chandrayaan 2

தொட்டு விடும் தூரம் தான்...

Covid 19 virus

வைரஸ் எனும் வைரியே...

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net