சித்திரைப் பெண்ணே
சிறப்புடன் வருக - ஒரு
முத்திரைப் பதித்திட
முழுமதியாய் வருக!
சித்தரைப் போல்மனதில் - நற்
சிந்தனைகள் பெருக
சித்திரையே சித்திரையே - எமக்கு
சில வரங்கள்நீ தருக!
சித்திரையே,
இளந்தென்றலாய் வீசிடு - எம்
இன்னல்கள் அகல
இடரெல்லாம் நீங்கி
இல்லங்கள் மகிழ!
வாய்பேசும் வார்த்தைகளில்
வாய்மையது திகழ
நேர்மையென்றும் வழுவாமல்
நல்லதெல்லாம் நிகழ!
இனி,
புதுவெள்ளம் நதியெல்லாம்
புரண்டோடட்டும்
மணல் அள்ளும் கூட்டங்கள்
அரண்டோடட்டும்!
மது இல்லா தமிழகம்
நிஜமாகட்டும் - பொது
நலம் கொண்ட சமுதாயம்
உருவாகட்டும்!
சாதி மத பேத
இரு ளகலட்டும் - நல்ல
சமத்துவ ஒளிவெளிச்ச
அருள் பரவட்டும்!
நெருப்பாக எரிகின்ற
வெறுப் பணையட்டும் - தம்
பொறுப்புணர்ந்து இதயங்கள்
ஒன் றிணையட்டும்!
ஒன்றிந்த தேசமென்று
உணர் வுண்டாகட்டும் - எமைப்
பிரித்தாளும் சூழ்ச்சிகள்
திணறித் திண்டாட்டும்!
சித்திரையே,
விவசாயம் அதன் மகிமை
இழக்காமலிருக்க - எம்
அரசாங்கம் தன் கடமை
மறக்காமலிருக்க,
இலஞ்ச ஊழல் பேய்களை
வஞ்சம் கொண்டு ஒழிக்க
பஞ்சமின்றி நோய்களின்றி
நெஞ்சமிங்கு சிரிக்க,
ஏய்த்துப் பிழைக்கின்ற
எண்ணங்கள் ஒழிய
உழைத்து வாழ்ந்திடவே
உள்ளங்கள் முயல,
வேலையற்ற வீணர்களின்
தேவையற்ற கூச்சலினால்
பாதைமாறி சென்றிடாமல்
இலக்கை நோக்கி நகர,
பழங்கதைகள் பேசிப்பேசி
இழந்ததெல்லாம் போதும்
பழம்பெருமை மறக்காமல்
நலம்பெறவே யாமும்,
சீர்மிகு சித்திரையே
போற்றுகிறோம் வருக
கூர் நோக்கி யாமின்று
கேட்ட வரம் தருக!
இனிய
தமிழ்ப் புத்தாண்டே
புதுப் புனலாய் வருக - எம்
தமிழ்நாடு தலைநிமிர்ந்து
தரணியில் புகழ் பெருக!
நம்பிக்கையுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.