சந்திரயான் - 2
நிலா...!
அது
வான் அணிந்த மகுடம்
நீரின்றி பூத்த கமலம்
முகில் இசைக்கும் முரசு
இயற்கை தந்த பரிசு!
பகலில் ஒளி வாங்கி
இரவில் வெளிச்சம் தரும்
இலவச விளக்கு,
இரவு நேரக் கிழக்கு!
அந்த நிலா,
கவிஞர்களின்
அட்சயப் பாத்திரம்,
விஞ்ஞானிகள் ஆராயும்
நித்திய சாத்திரம்!
நிலா நிலா ஓடி வா
என்று சொல்லிக்கொண்டிருந்த நாம்
இன்று அந்த
நிலவைத்தேடியே சென்றுவிட்டோம்!
இயற்கை வானுக்குப்
பொட்டு வைத்த நிலவை,
இந்தியா
தொட்டுப் பார்க்க நினைத்தது,
எட்டி நிற்கும்
நிலவுக்குள் சென்று
எட்டிப்பார்க்க முனைந்தது,
வெற்றிக்கொடியை
நிலவில்
நட்டுவைக்க முயன்றது!
சந்திரயான் 2 - இது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி
வல்லமையின் அற்புதம்,
இந்தியர் எல்லோரும்
கொள்ளவேண்டும் பெருமிதம்,
ஒரு தமிழன் தலைமையில்
நிலவை நோக்கிச் செல்லும் பயணம்
இது ஒவ்வொரு தமிழனும்
கர்வம் கொள்ளும் தருணம்!
சந்திரனில் இறங்கமுயன்ற
இந்தியா அனுப்பிய
எந்திரம்,
கால் வைக்கும் நேரத்தில் - தொடர்பு
கைவிட்டுப் போனது.
மந்திரமா? - இல்லை
அந்தரத்தில் இருக்கும் தன்னை
தொந்தரவு செய்வது பிடிக்காத
நிலவு செய்த தந்திரமா?
நிலவைத்
தொட்டுவிடும் நேரத்தில்
கெட்டுவிட்டதே எல்லாம்
என மனம் நொந்திடுமா?
இல்லை -அது மீண்டும்
தொட்டுவிட திட்டமிட - புதிய
உத்வேகம் தந்திடுமா?
பல காலம் பழகிய
பக்கத்துவீட்டு மனிதர்களின்
மனங்களையே
அறிய முடியாத உலகில்,
பல்லாயிர காத தொலைவில்
புவி விட்டு விலகி இருக்கும்
நிலவை ஆராய்வது,
சவாலான செயல் மட்டுமல்ல
சாகசமான செயலும் கூட!
எந்த ஆராய்ச்சிக்கும்
அடித்தளம்
அசாத்திய பொறுமை,
ஒவ்வொரு சோதனையும்
சாதனை அடையுமுன்
தரும் வேதனை தான்,
இந்த காத்திருப்பு,
பல சமயம் அந்த காத்திருப்பு
மகிழ்ச்சியில் முடியும்,
சில சமயம்
அது துவளவைத்துப் பின்
உத்வேகம் தரும் - புது
முயற்சியில் விடியும்!
புவியில் இரண்டு வாரம்
நிலவில் ஒரு நாள்,
விக்ரம் ஆய்வுகலத்திலிருந்து
சமிக்கை கிடைக்க
சில நாட்கள் என்றாலும்
பல வாரங்கள்
காத்திருக்கத்தான் வேண்டும்!
தொடர்பு தான்
துண்டிக்கப்பட்டுள்ளதே தவிர - நம்
தொடர் முயற்சி
தண்டிக்கப்படவில்லை,
பயணத்தில் சிறிய
தடங்கல் ஏற்பட்டுள்ளது,
பயணம் சிறிதும்
தடைப்பட்டு விடவில்லை!
நிலவில் இறங்கும் முயற்சி
தோல்வி அடையவில்லை,
நிலவை நெருங்கும் முயற்சியில்
வெற்றி அடைந்துள்ளோம்!
வானெனும் வெளி விட்டத்தில் - தெரியும்
நிலவெனும் ஒளி வட்டத்தில் - நுழையும்
இஸ்ரோவின் பெரும் திட்டத்தில் - சிறிய
தவறு நேர்ந்திருக்கலாம்
தொழில்நுட்பத்தில்,
விண்வெளி ஆராய்ச்சியில்
இனி வரும் காலகட்டத்தில்
நிச்சயம் நிலைக்கும்
இந்தியாவின் புகழ் உச்சத்தில்!
விஞ்ஞானிகளின்
பல வருட கடின உழைப்பு
சில நொடி நிகழ்வுகளால்
சிதைந்து விடக் கூடாது,
தோல்வி என்று எண்ணியெண்ணி
மனம் நம்பிக்கை
இழந்து விடக் கூடாது - புதிய
உத்வேகத்துடனும்
உற்சாகத்துடனும் முயலுங்கள்
அடுத்த முறை இச்சிறு தவறும்
நிகழ்ந்து விடக் கூடாது,
பாரத பிரதமரும்
நூற்று முப்பதுகோடி மக்களும்
உங்கள் மீது வைத்துள்ள
நம்பிக்கையை
மறந்து விடக் கூடாது!
மீண்டும்
முழு மூச்சோடு
முயற்சி தொடரட்டும்,
முழு நிலவில்
மூவர்ண கொடி
பட்டொளி வீசி
ஒளிரட்டும்!
தோள் தட்டி துணிவூட்டி
நேரில் வந்துப் பாராட்டி
ஊக்குவிக்கும் தலைவன் இருக்கையில்,
வேறென்ன வேண்டும்
உத்வேகம் கொள்ள,
சோர்வையெல்லாம் மூட்டைக்கட்டி
வெறியோடு வெற்றி நோக்கி
முன்னேறிச் செல்ல!
நிலவு மட்டுமல்ல
அதையும் தாண்டிச்
செல்வோம் வெல்வோம்
என வீறுகொண்டு எழுங்கள்
விஞ்ஞானிகளே!
நாளை
வெங்கல நிலவில் - இந்திய
விண்கலம் இறங்கட்டும்,
உலகுக்கு
விண்வெளி ஆராய்ச்சியில்
நம் பலம் விளங்கட்டும்,
நம் புகழ் பரவட்டும்
திக்கெட்டும்,
நம் குரல் ஒலிக்கட்டும்
வான் மட்டும்!
இஸ்ரோ
இந்திய மக்களின்
நம்பிக்கை நட்சத்திரம்,
தங்க நிலவு - நாளை
இந்திய விஞ்ஞானிகள்
தங்கப் போகும்
விண் சத்திரம்!
மதி என்று நிலவை நாம்
சொல்வதுண்டு
மதி கொண்டு மதியை நோக்கி
சென்றோம் இன்று,
பதிப்போமே நிலவில் நாமும்
நாளை காலை
உதிக்கட்டும் விடியல் நல்லதாய்
நாளை காலை,
புதியதோர் சரித்திரம்
படைப்போம் நாமே
விதியையும் மதியினால்
வென்று தானே!
இதோ...
தொட்டு விடும் தொலைவில்
கைக்கெட்டும் தூரத்தில்
நிலவு!
நம்பிக்கையுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.
08-23-2023
நம்பிக்கை வீண் போகவில்லை. சந்திரயான் 3 வெற்றிகரமாக இன்று நிலவில் தரை இறங்கியது.