Chidhambaram Natarajar Temple

சமூகம்

என்னை விட்டுப் பிரிவாயோ?

அழைக்காமல் வந்தாய்
அன்புடன் வரவேற்றேன்,
பல்சுவை விருந்தளித்து
புன்முறுவலுடன்
உபசரித்தேன்!

நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமாய்
இணைபிரியா நட்பில்
ஒன்றிணைந்து விட்டோம்!

தேய்பிறையின்றி
வளர்பிறையாகவே
வளர்ந்து
மலர்ந்தது நம் உறவு!

ஒரே தட்டில் உணவருந்தி
ஒரே கட்டிலில் தினமுறங்கி
ஓர் உடல் ஓருயிராய்
மாறிவிட்டோம்!

இது நட்பா? காதலா?
தெரியவில்லை,
இது தப்பா? தவறில்லையா?
புரியவில்லை!

பசி வந்தால்
பத்தும் மறந்துவிடும்
எனச் சொல்வதுண்டு,
உண்மைதான்,
பசி வந்தால் - நான் உனை
மொத்தமாய் மறந்து விடுகிறேன்!

உணவுண்டு முடியும் வரை
உனைப்பற்றிய
நினைவென்றும் வந்ததில்லை,
இருந்தும் கூட,
என் மேல்
சினம் கொள்ளாமல்
சினேகமாய் இருக்கும்
உனைக்கண்டு
உளம் மகிழ்கிறேன்!

எத்தனை ஆண்டுகள்
இப்படி இருந்தோமென்று
விளங்கவில்லை - இன்னும்
எத்தனை ஆண்டுகள்
இப்படி இருப்போமென்றும்
கலங்கவில்லை!

எதிர்காலத் துன்பங்களை எண்ணி
நிகழ்கால இன்பங்களை இழந்திட
எனக்கு விருப்பமில்லை!

ஆனால்
கால மாற்றத்தில்
உன்னால் சில சங்கடங்கள்
ஏற்பட்டுவிட்டது,
தவிர்க்கமுடியாத காரணத்தால்
உன்மேல்
மனகசப்பு முற்றிவிட்டது!

உன்னோடு எனைக்கண்டு
கேலிப் பேசுகிறது சுற்றம்,
உன்னைப் பற்றித் தெரியாமல்
வளரவிட்டதா என் குற்றம்?

உன்னால்
உள்ளம் பாரமாகி
உடலும் பாரமாகிவிட்டது,
நாட்கள் செல்லச் செல்ல
உடலும் சோர்ந்து
உள்ளமும் சோர்ந்துவிட்டது!

உன்னை
மறைத்து வைக்கவும்
வழிகளில்லை,
உன்னிடம்
முறைத்துக்கொள்ளவும்
முடியவில்லை!

தக்க சமயத்தில் உனை விலக
பலமுறை யோசித்தேன்,
பக்குவமாய் உனைப் பிரிய
பலவழிகளில் முயற்சித்தேன்!

ஆளில்லா தனிமையில்
அமர்ந்து சிந்தித்தேன்,
ஆலோசனைப்பெற அறிஞர்
பலரையும் சந்தித்தேன்!

பத்தியம் கூட இருந்துவிட்டேன்
பைத்தியம் போல அலைந்துவிட்டேன்
சத்தியமாக முடியவில்லை
வைத்தியம் கூட இதற்கு இல்லை!

பிரிவினில் எல்லோரும்
வருந்துவார்கள்,
நானோ - உனைப்
பிரிய முடியாமல்
வருந்துகிறேன்!

உன்னாலே இன்னும் பல
இன்னல்கள் நேருமோ?
உண்ணா நோன்பிருந்தால் தான்,
பரிதாபம்கொண்டு
என்னைவிட்டு விலகத்தோன்றுமோ?

என்ன செய்தால் நான்
என்னை விட்டுப்போவாய்?
அழையாமல் வந்ததுபோல்
சொல்லாமல் செல்வாய்?

உன்னிடமிருந்து
விடுதலை
என்பது கிடைக்காதா?
இந்த
விடுகதைக்கு
விடையே கிடையாதா?

என் உயிர் இருக்கும் வரை
என் உடன் இருப்பாயோ?
என் அழகியத் தொப்பையே!

இந்த
விஞ்ஞான யுகத்தில்
தந்தி கூட மறைந்திவிட்டது,
தொந்தி குறைக்க முடியவில்லையே!

 

ஏக்கத்துடன்
இராம்ஸ் முத்துக்குமரன்!

 

தொடர்புடைய கட்டுரைகள்

Chandrayaan 2

தொட்டு விடும் தூரம் தான்...

Covid 19 virus

வைரஸ் எனும் வைரியே...

நல்ல புத்தாண்டே வா...

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net