Chidhambaram Natarajar Temple

சமூகம்

Kumbakonam school kids who lost their lives
Featured

கும்பகோணம் பள்ளி தீ விபத்து

ஜூலை 16, 2004

பஞ்சுப் பொதியது எரிவதைப்போல்
பிஞ்சுகள் எரிந்து கருகியதே
நெஞ்சு வலிக்கிறதே கேட்க்கையிலே - அப்
பிஞ்சுகள் வலியினை யாரறிவர்,

கொஞ்சி மகிழ்ந்திடும் மழலைகளை
கொன்று அழித்தது கோரமன்றோ
வஞ்சினம் கொண்ட தீ நாக்கே
எங்ஙனம் முடிந்தது எரித்திடவே?

தீயே,
நஞ்சுள்ளம் கொண்ட பயங்கர - நய
வஞ்சகரும் செய்யத் துணிந்திட
அஞ்சிடும் அரக்கச் செயலன்றோ?
ஐயகோ எப்படி உன்னால் முடிந்ததுவோ?

கொஞ்சமும் இரக்கம் இல்லாது
வஞ்சம் கொண்டது ஏன் தீயே?
அஞ்சுக மொழிபேசும் மழலைகளை
அநியாயமாய் அழித்து ஒழித்தாயே!

குஞ்சென்று மூப்பென்று தீயில் இல்லை - என
புகழ்ந்தானே பெருமையாய் பாரதி அன்று
பிஞ்செல்லாம் எரித்த உன்னைக் கண்டால்
இகழ்ந்தெரிப்பான் சினம்கொண்டு உன்னை இன்று!

உக்கிரமாய் எரிக்கும் வெயில் கூட
அக்கிரமம் செய்ததில்லை உனைப் போல
சிறகடித்து பறக்கும் முன்னாலே
விறகென எரித்தது ஏன் தீயே?

எதையும் எரிக்கும் நெருப்பே - உனக்கு
இதயம் இருந்தால் இப்படி செய்திருப்பாயா?
சிதையாய் ஆனதே வகுப்பறையும் - உன்னால்
சிதைந்துப் போனதே பல தலைமுறையும்!

அரும்புகளை மட்டும் பொசுக்கவில்லை - கண்ட
கனவுகளையும் அல்லவா நீ பொசுக்கிவிட்டாய்
இரும்பு மனதும் கொடுமைக் கண்டு இளகிடுமே - பெற்ற
மனது எல்லாம் என்ன பாடுபட்டு பொசுங்கியிருக்கும்?

அடுப்புச் சூடே எமை வருத்தும் - அவர்களை
அடுப்படி விறகாய் எரித்துவிட்டாயே
உடுப்பு பற்றி உடலும் எரிகையிலே
கடும்வலியினில் எப்படி துடித்தனரோ?

வாழ வேண்டிய பிள்ளைகளை - ஏன்
வாழை இலையில் படுக்க வைத்தாய்?
நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களை - ஏன்
கோழையே எரி நட்சத்திரமாய் எரித்துவிட்டாய்?

பாலூட்டி சீராட்டி வளர்த்த மழலைகளை
யாரென்று தெரியாதவாறு ஏன் பாழாக்கினாய்?
பாலூற்றி ஈமக்கிரியையினை பெற்ற - பெற்
றோரே செய்யும் இழிநிலைக் காளாக்கினாய்?

காட்டை எரிக்கும் பெருநெருப்பு - சிறு
கூட்டை எரிப்பதா ஒரு சிறப்பு?
கேடு நினப்பவர் பலர் இருக்க - பள்ளிக்
கூட பிள்ளகள் மேல் ஏனிந்த பெரும் வெறுப்பு?

தீக்கிரையாக்கினாய் பிள்ளைகளே
தீர்ந்ததா உந்தன் கோரப் பசி
ஏய்ப்பவர்களிடம் எல்லாம் ஏமாந்துவிட்டு
ஏதுமறியா குழந்தைகளை ஏன் அழித்தாய்?

பஞ்ச பூதங்களில் ஒன்றன்றோ - புவி
அஞ்சும் பாதகம் செய்ததன்று
அஞ்சில் ஒன்றான நீர் மட்டும்
கொஞ்சம் பெய்திட மறந்தது ஏன் அன்று?

புள்ளி மானாய்த் துள்ளி ஓடி
பள்ளிச் சென்ற புள்ளினங்கள்
சுள்ளி என கருகியதேன் - யாரைக் கேட்டு
கொள்ளி வைத்தாய் கொடுந்தீயே?

கோவில் நகரத்தை இப்படி ஒரு
கோர நரகமாய் மாற்றியத் தீயதீயே
கோவில் தெய்வமெல்லாம் அன்று மட்டும்
'லீவில்' எங்கேயோ சென்றுவிட்டனவோ?

இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்த
நீரெல்லாம் எங்கே போனதுவோ? - தீக்
கிரையாகும் உயிரினை காப்பாற்றாமல்
ஊரெல்லாம் இருந்தும் பயனென்னவோ?

குழந்தைகள் இப்படி கருகிட கடவுளே
நடந்தது எப்படி இக் கொடுமைகள் உம்முன்னே
குடந்தை நகரின் தெய்வங்கள் எல்லாம்
உடந்தையா இந்த இழிச்செயலுக்கு?

தீயவர் எத்தனை பேர் உண்டு
தீயே உனக்கு கண்ணில்லையா?
தீயவரைத் தொட ஒரு திராணியின்றி
தூய மலர்களைக் கொளுத்தி குளிர் காய்ந்தாயோ?

கொள்ளை அடிப்போர் கொலைச் செய்வோரையெல்லாம்
வெள்ளையும் சொள்ளையுமாய் நடமாட விட்டுவிட்டு - ஒன்றுமறியா
பிள்ளைச் செல்வங்களை கொன்று குவித்தாயே - இதுவொரு
எல்லை மீறிய பயங்கர தீவிரவாதமே

மலரைப் பறிப்பதே பாவம் என்று நினைக்கையில்
மொட்டுகளை எரிக்க எப்படி மனம் வந்தது?
பலரை பழி பாவங்கள் செய்ய விட்டுவிட்டு - நல்லோரை
மட்டும் தண்டிக்க எப்படி மனம் வந்தது?

முத்தம் கொடுத்தாலே கன்னம் வலிக்கும்
தத்தைகள் தணலில் வெந்தனரே உன்னாலே - அவர்களை
மொத்தமாய் கொடுந்தீக்குக் கொடுத்துவிட்டு
நித்தமும் கலங்கி இருக்குதே பெற்ற மனது எந்நாளும்!

பிணம் என்று எரித்தாலே நம்
மனம் வருந்துமே மறக்க வழியில்லாது - பால்
மணம் மாறா மழலைகளை உயிரோடு எரித்தாயே - அந்த
இரணம் ஆறுமோ? என்ன பதில் கூறுவாய்?

தொன்னூற்றி நாலு உயிர்களைக் காவு கொண்டாய் - மூ
வாறு சிறார்களுக்குப் படுகாயம் தந்தாய்
இன்னுமோர் முறை இதுபோல கொடுமைச் செய்யாத
வாறு இருந்தாலே போதும் என்றும் கலிகாலத் தீயே!

ஆறா காயத்துடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.

தொடர்புடைய கட்டுரைகள்

Chandrayaan 2

தொட்டு விடும் தூரம் தான்...

Covid 19 virus

வைரஸ் எனும் வைரியே...

நல்ல புத்தாண்டே வா...

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net