மரணமில்லாப் பெருவாழ்வு
இறைவா எனக்கு வேண்டாம்
மரணம் வரும் வரை இவ்வாழ்வில் - மன
நிறைவாய் வாழ்ந்தால் அது போதும்!
முதுமை வந்த பின்னாலே
முழுதும் முடங்கிப் போகாமல்
முடிந்த வரையில் தன்னாலே
நடமாடி இருந்தால் அது போதும்!
வயது கூடி விடும் போது
வலிகளும் கூடவே கூடாமல்
பயந்து வாடி வருந்தாமல் - மனம்
தெளிந்து இருந்தால் அது போதும்!
எதுமெய் என்று உணராமல் - எண்ணம்
போன போக்கில் வாழ்ந்துவிட்டு
முதுமையில் தனித்து வாழ்கின்ற - ஒரு
இன்னல் இல்லாதிருந்தால் அது போதும்!
உடலதை சுமப்பதே பெரும் பாடு - இதில்
உள்ளத்தில் சுமப்பதால் வரும் கேடு
கடலைப் போலது கவலைகள் சுமக்கும் - ஒரு
பள்ளமாய் இல்லாதிருந்தால் அது போதும்!
சொத்துச் சுகங்கள் இல்லையென்றாலும்
சொந்தம் யாரும் வரவில்லையென்றாலும்
தத்தம் வேலையை தானே செய்து
சொந்தக் காலில் நிற்கமுடிந்தால் அது போதும்!
மண்ணாளும் மன்னனாய் இருந்தாலும்
மண்தரையில் படுத்துக் கிடந்தாலும்
தன்னால் முடிந்தச் செய லெல்லாம்
எந்நாளும் செய்திடமுடிந்தால் அது போதும்!
இடுப்பை நகர்த்தவும் முடியாமல்
படுத்தப் படுக்கையாய்த் துயருற்று
அடுத்த வருக்குச் சுமையென வருந்தும் - ஒரு
கொடுமையில்லா திருந்தால் அது போதும்!
முதுமையில் ஒருவர் அழுகின்ற
நிலைமையைப் பார்ப்பது மிக கொடிது
முதுமையில் வலிகள் ஏதுமில்லா - ஒரு
புதுமையைப் படைக்க முடிந்தால் அது போதும்!
நன்றாய் வாழ்ந்த ஒருவர் இங்கு
இன்னல் பலவுற்று அழுகையிலே
என்று போகுமோ உயிரென்று - எவரையும்
எண்ண வைக்காதிருந்தால் அது போதும்!
சுமையாய் இருக்கின்றோம் என வருந்தி - மனம்
குமைந்து போகுமே தன் நிலையெண்ணி
இமைப்போல் விழிக்கு சுமையின்றி
அமைந்தால் முதுமை அது போதும்!
எப்படி எப்படி வாழ்ந்தவரெல்லாம் - முதுமையில்
இப்படி இன்னல் உறும் துயர் கண்டு
எப்படி வாழ்ந்தால் தான் என்ன - என மனம்
எண்ணாதிருந்தால் அது போதும்!
வலுவாய் உடலும் இருக்கையிலே - வரும்
வலிகள் எல்லாம் தாங்கிடுமே
முழுதாய் முதுமையில் தளர்கையிலே - மன
வலிமை இருந்தால் அது போதும்!
மூப்பு வருவது இயற்கை தான் - மூட்டு
தேய்வதும் தளர்வதும் இயற்கை தான்
மூச்சு விட எந்த சிரமமின்றி
மூத்தோர் வாழ்வு இருந்தால் அது போதும்!
கண்ணும் கருத்துமாய் வளர்த்த பிள்ளைகள் - மனம்
துவள வைத்து கவனிக்க மறுத்து
தன்னந் தனியாய் தவிக்க விடும் - ஓர்
அவல நிலையில்லாதிருந்தால் அது போதும்!
உடல் உபாதைகள் வரிசையாய் அடுத்தடுத்து
கடலலை போல வந்து வருத்துவ தேனோ?
மடலது திறந்து மணக்கும் மலர் போல் - தினம்
உடலது பிணியின்றி இருந்தால் அது போதும்!
விடுப்பின்றி உழைப்பவள் தாய் அன்றோ - அவள்
போன்று அவனியில் யார் உண்டு
இடுப்பு வலிதனை மிக பொறுத்து அன்று
ஈன்றவளுக்கு முதுமையில் வலி எதற்கு?
குடும்பம் என்னும் வீட்டினை என்றும்
தூணாய்த் தாங்கிய தந்தைக் கின்று
இடும்பை தருவதேன் முதுமையிலே
வேண்டாம் முதுமையில் வலி எவர்க்கும்!
ஊர்பழி சுமத்தும் பேர்வழி எல்லாம்
பாரிலே பாங்காய் வாழ்கையிலே
கூர்விழி கொண்டு நேர்வழி செல்வோர் வாழ்வில்
பேரிடர் துயரெல்லாம் வருவதும் ஏன்?
மின்னல் போல வலி வந்து
இன்னலும் தீர்ந்தால் மிக நன்று
உண்ணலும் உறக்கமும் சுமையாகும்
கன்னலும் கசக்கும் நிலை ஏனோ?
வாழ்வில் செருக்கும் ஆணவம் கொள்வோர்க்கு
வாழ்க்கையை வெறுக்கும் நிலை வரலாம்
வாழ்வில் பொறுப்பாய் வாழ்பவர்க்கு - முதுமையில்
வாழ்வே நெருப்பாய் சுடுவதும் ஏன்?
குடலது வெடித்து விடும் வண்ணம்
தினம்தினம் விதமாய் உண்ணும் பலர்
உடல்நலம் ஒன்றே நம் சொத்து - என
மனம் தெளிந்து மாறினால் அது போதும்!
ஒருவேளை உணவின்றி பலர் இருக்க
அறுசுவை தினம் உண்ணும் பலர் இங்கு
ஒருவேளை யாவது உணவளிக்கும்
ஒரு சேவையாய்ச் செய்தால் அது போதும்!
எனக்கே வேண்டும் என்ற சுயநலமின்றி
என்னால் தான் என்ற கர்வமின்றி
தனக்குப் பின் தான தருமமென்று
தன்னால் உதவிட முடிந்தால் அது போதும்!
கோடி செல்வம் இருந்தால் என்ன
ஆடி அடங்கும் நிலையற்ற வாழ்வினிலே
நாடி தளர்கையில் ஓடிவந் துதவும்
ஈடில்லா சுற்றமிருந்தால் அது போதும்!
மலையென செல்வம் குவிந்திருந்தாலும் - எதையும்
விலைக்கொடுத்து வாங்க முடிந்திருந்தாலும்
நிலையற்ற வாழ்வெனும் எண்ணம் மனதில் - என்றும்
நிலைபெற்று இருந்தால் அது போதும்!
நித்தம் அறநெறி யாரும் மீறாது
தத்தம் கடமையை எவரும் தவறாது
சுத்தமாய் உடல் பிணியேது மில்லாது - புவி
புத்தம் புதிதாய் மாறினால் அது போதும்!
ஒழுக்கமின்றி வாழ்ந்து களிக்கும் பலர்
நிலைமை கைமீறி போகும் முன்னர் - நாளை
நமக்கும் முதுமை வரும் என்று
இளமையில் உணர்ந்து திருந்தினால் அது போதும்!
முதுமை என்பது தண்டனையா?
முதுமையில் வரும் துயர் தண்டனையா?
படும்பாடு எல்லாம் முன் வினையா?
பார்த்து வருந்தும் நமக்கு படிப்பினையா?
முதியோர் படுகின்ற துயர் கண்டு
விதியென எண்ணி ஒதுங்காமல்
மதித்து அவர்களை இளையோர் காக்கும்
புதியதோர் மாற்றம் வந்தால் அது போதும்!
முதுமையைப் போற்றுவோம்
இராம்ஸ் முத்துக்குமரன்.