(புல்வாமா தாக்குதல் - பிப்ரவரி 14, 2019)
நாட்டைக் காத்த / காக்கின்ற அனைத்து வீரர்களுக்கும் சமர்ப்பணம்!
பிப்ரவரி 14
பாரெங்கும் காதலர் தினம்
பாரதத்திற்கோ - நாட்டுக்காக
உயிர் நீத்த
காவலர் தினம்,
போரிலே இந்திய வீரரை எதிர்கொண்டு
நேர்வழியில் வெல்லமுடியா எதிரிகள்
ஓரிடம் விட்டு வேறிடம் செல்கையில் - தம்
வீரத்தைக் காட்டினர் கோழையாய்,
வேட்டை மிருகமாய் கடும்வெறி கொண்ட
வேற்றவர்த் தீட்டிய வஞ்சக சதியில்
நாட்டைக் காக்கின்ற நற்பணி செய்யும்
நாற்பது வீரர்கள் இன்னுயிர் ஈந்தனர்,
வீர சொர்க்கமே விருதென எண்ணி
தீரமாய் போரிடும் குணத்தோர் அல்லவா?
ஈரமில்லா எதிரிகளின் ஈனத்தால் மாண்ட - அன்
னாரது ஆத்மா அமைதி கொள்ளுமா?
குண்டடிப் பட்டுக்குற் றுயிராய் இருந்து
துண்டான உறுப்புகள் கண்முன்னே கிடந்து
கண்டுகொள்ள யாருமின்றி உயிர்பிரியும் முன்பு
கொண்டவலி யறிந்தவர் யாரிங்கு உண்டு?
கோரமாய் சிதறிய அவ்வுடல்களின் இரத்தம்
வீரத்தை விதைத்திடும் தேசத்தில் நித்தம்,
ஆறாய் ஓடிய சிந்தியக் குருதி - தேசத்தின்
வேராய் மாறி கொடுக்கட்டும் உறுதி,
வீரமரணம் எய்திய அவர்தம் பெருமை
ஓரிரு நாட்கள் பேசிய பின்னர்
ஊரும் நாடும் மறப்பது கொடுமை
மாறட்டும் இனிநம் மக்களின் எண்ணம்,
நாட்டுக்காக இன்னுயிர் துறந்தோர்
வீட்டுக்குள் நிலவரம் யாரிங்கு அறிவர் - பா
ராட்டுகள் மட்டும் போதுமோ வாழ்ந்திட
காட்டுவோம் நன்றியை நல்லதோர் செயலில்,
முப்படை வீரர்கள்
பனியிலும் குளிரிலும் தனியாய் இருந்து
மழையிலும் மலையிலும் முழுதாய் நனைந்து
இரவிலும் பகலிலும் இடையறா துழைக்கும்
இராணுவ வீரர்களே தலை வணங்கினோம் உமக்கு,
குடும்பத்தை மறந்து - கொடும்
குளிரிலே உறைந்து
கடமையை உணர்ந்து - கடும்
வெயிலிலே கிடந்து
உடும்பின் உறுதியை
உள்ளத்தில் சுமந்து
எல்லையைக் காக்கின்ற வீரர்களே
இல்லையே உமக்கிணைத் தோழர்களே,
இன்னலும் துன்பமும் அடைந்தீரே
இன்பத்தில் மக்கள் இருந்திடவே - நீவிர்
கண்ணைத் திறந்து பாதுகாப்ப தினாலேயே
கண்கள்மூடி உறங்குது நாடும் இரவினிலே
எண்திசை எல்லைகள் காக்கின்ற
எம் எல்லைச்சாமி நீங்களன்றோ?
விண்முதல் கடல்வரைக் காப்பதினால் -
உண்டு மகிழ்கிறோம் உண்மையன்றோ?
உமக்குத்
தாய்ப்பாலோடு தைரியம் ஊட்டிய
உம் அன்னைக்கு நன்றி
பாசத்தோடு தேசப்பற்றை போதித்த
உம் தந்தைக்கும் நன்றி,
வாய் சொல்லில் வீரர்கள்
நாட்டுக்குள்ளே பலர் உண்டு
தாய் மண்ணைக் காக்கும்
உண்மை வீரர்களே,
தலை வணங்குகிறோம்
போற்றி உமை இன்று!
இந்திய இளைஞனே,
குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிர்போகும் முன்பும்
கைப்பிடி மண்ணையும் விடாமல் தடுக்கின்ற காட்சி
கண்டிருப்பாய் திரையில் நடிப்பவர் சிலரை - இன்று
கண்டுக்கொள் உண்மையில் அப்படி இருப்போர் பலரை,
கட்டுக்கட்டாய் Currency நோட்டுக்கு
நடிப்போர் பின்செல்லும் இளைஞனே நில்லு
உயிரைக் கொடுத்து நாட்டைக் காக்கும்
உண்மை வீரனே இனி Hero வென சொல்லு!
கோவிலாய்த் திகழ்ந்திடும் பாரத மண்ணிலே
பாவிகள் புரிந்த பாதக செயல்கண்டு
தீவிரவாதத்தை வேரடி மண்ணோடு
தீவிரமாய் அழிக்கின்ற அரசின்று உண்டு,
ஏவல் செய்திடும் சேவகர் அல்ல - நாட்டைக்
காவல் காக்கின்ற வீரர்கள் என்றும்
காதலர் தினமென்று கொண்டாடும் நீயின்று
காவலர்த் தொண்டையும் கொண்டாடு என்றென்றும்
பிப்ரவரி 14
பாரெங்கும் காதலர் தினம்
பாரதத்திற்கோ - நாட்டை
உயிராய் நேசித்துப்
பாதுகாக்கும்
காவலர் தினம்!
முப்படை வீரர்களைப் போற்றுவோம்
அவர் தம்,
அளப்பரிய
தியாகத்தையும் வீரத்தையும்
பறை சாற்றுவோம்!
சிரம் தாழ்ந்த வணக்கத்துடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.