இக்கவிதை
மகள் எனும்
தேவதைகளுக்கு
ஓர் அர்ப்பணம்!
மகள்கள் - அவர்கள்
மனமெங்கும் வியாபித்திருக்கும்
மகிழ்ச்சியின் துகள்கள்,
வாழும்போதே உணரவைக்கும்
சொர்க்கத்தின் நகல்கள்,
மனித வாழ்வின்
மகத்துவம் மகள்கள்,
மனிதனைப் பெற்ற
தாயிற்குப் பின்
மனிதன் பெற்ற
தாய் தான் அவர்கள்!
மகள்களைப் பெற்ற
தந்தைக்குத் தான் தெரியும்
பெண்களின் அருமை,
அவர்களுக்குத் தான் புரியும்
பெண்களின் பெருமை!
மழலையின் சிரிப்பில்
கவலைகள் மறக்கும்,
அந்த மழலை
மகளாய் இருந்தால் - எப்படி
கவலைகள் பிறக்கும்?
மகள்கள் எல்லோருமே
அன்றலர்ந்த மலர்கள்,
மகிழ்ச்சி தருவது
என்றுமே அவர்கள்!
மகள்களின் முத்தம்
மாயம் செய்யும்,
அரும்பிடும் புன்னகை
கொள்ளைக் கொள்ளும்,
மகளிருந்தால்
ஆனந்த பூமழை
நித்தம் பெய்யும்,
அகமது மகிழ்ந்து
நன்றிகள் சொல்லும்!
மகன்கள் - பரம்பரையின்
வாரிசாக வருபவர்கள்
மகள்களோ - பரம்பொருளின்
பரிசாக வருபவர்கள்!
இல்லத்தைப் பூஞ்சோலையாய்
மாற்றுபவள் மகள்,
உள்ளத்தைப் பூம்பொதியாய்
ஆக்குபவள் மகள் - ஆனந்த
வெள்ளத்தின் வற்றாத
ஊற்று தான் அவள்,
கசப்பையும் - அச்சு
வெல்லத்தின் சுவையாய்
மாற்றுவாள் அவள்!
மகள்கள் உள்ள வீட்டில்
வாழ்ந்துப் பாருங்கள் - பெண்களை
மதிக்கக் கற்றுக் கொள்வீர்கள்,
மோகம் கொண்டு
போகப் பொருளாய்
காணும் குறையது அகலும் - கரு
மேகம் கலையும்
தேகம் குறுகும்
நாணும் கறைகொண்ட அகமும்,
மகள்களைப் பெற்ற மனிதன்
மனைவியை மதிப்பான்
மகள்களைத் துதிப்பான்,
இரும்பைப் போல் உறுதி
இருந்தும் இருக்கும் மென்மை
கரும்பைப் போல இனிமை
இதுவே மகள்களின் தன்மை!
எல்லா மகள்களாலும் - ஒரு
மகனாக மாறமுடியும்
எந்த மகனாலும் - ஒரு
மகளாக மாறமுடியாது!
மகள்களின் உலகம்
மகத்துவமானது
தனித்துவமானது,
அங்கே
முப்பது நாளும்
முழுமதி ஒளிரும்
எப்பொழுதும்
வசந்தம் வீசும்,
துன்பம் கூட
இன்பம் ஆகும்
துவளவிடாது
உற்சாகமூட்டும்,
அங்கே
கனவுகளை மெய்யாக்க
உண்டு உந்து சக்தி
கடுமையைக் கனிவாக்கும்
என்றும் மகளின் யுக்தி,
அவள்
முகம் பார்த்து
முகிழ் பூக்கும்,
குரல் கேட்டு
குயில் கூவும்,
தென்றல் வந்து
தாலாட்டும்
சந்தனமும்
மணம் கேட்கும்!
அஞ்சுகம்
அவளிடம்
கொஞ்சிப் பேசும், - அவள்
பிஞ்சு விரல் பிடித்து நடக்க
நெஞ்சம்
கெஞ்சி ஏங்கும்!
”மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு
மட்டும்தான் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று”
அழகான உணமையைச் சொன்னார்
கவிஞர் நா. முத்துக்குமார்,
”மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு
மட்டும்தான் தெரியும்
இன்பமும் காமத்தில் சேர்ந்ததில்லை என்று”
நானும் முத்துக்குமரன் தான்,
மகள்களோடு வாழும் நாட்கள் - மன
மகிழ்வோடு வாழும் நாட்கள்!
மகள்களிடம் செல்லத்
திட்டு வாங்குவது
ஒரு வகை இன்பம்,
மகள்கள் சொல்லக்
கட்டுப் படுவது
புது வகை இன்பம்,
மகள்களிடம்
தோற்றுப் போவது
ஓர் அலாதியான இன்பம்,
மகள்களோடு வாழ்வதே
நூற்றுக்கு நூறு இன்பம்!
மகள்களின் குணம்
தினம் பேசும்
மகள்களின் சினம் கூட
மணம் வீசும்,
அவர்கள் கொள்ளும் கோபம்
நீர்க்குமிழி போல
கணப் பொழுதில்
சட்டென மறைந்து விடும்
அவர்களின் நேசம்
காலம் முழுவதும்
கல்வெட்டு போல்
நிலைத்து நிற்கும்!
மனைவி வந்த பின்
தாயை மறப்பவன் கூட
மகள் வந்த பின் - தன்
தவறை உணர்வான்
தாய்மையை உயர்த்துவான்!
திருவள்ளுவருக்கு
மகள் இல்லை என்று எண்ணுகிறேன்,
அதனால் தான்
மகன்களுக்கு என்றே
சில குறட்பாக்களை பாடியுள்ளார்,
மகள் மட்டும் இருந்திருந்தால்
"முந்தை செய்த தவப்பயனே தந்தைக்கு
இம்மையில் பிறந்த மகள்"
என்று உணர்ந்துப் பாடியிருப்பார்
என்னைப் போல்
மனம் உவந்துப் பாடியிருப்பார்!
மலர்களின் வாசம் மனம் மயக்கும்
மகள்களின் பாசமோ நமை இயக்கும்
அவர்கள் நேசம் கண்டு மனம் வியக்கும்
அவர்களின் ரோஷம் கூட நலம் பயக்கும்!
மகள்கள் இல்லாத வீடு
மலர்கள் இல்லாத நந்தவனம்,
பசுமை இல்லாத பாலைவனம்,
வண்ணம் இல்லாத வானவில்
இன்னிசை இல்லா வேய்ங்குழல்!
தனியாக
ராஜாங்கம் இல்லை என்றாலும்
தந்தைக்கு
எல்லா மகள்களும்
இளவரசிகள் தான்,
மகள்கள் வசிக்கும் வீடு
குடிசை என்றாலும்
அரண்மனை தான்,
மகள்களின் மகிழ்ச்சியே
தந்தை அணியும்
மணிமகுடம்,
மகள்கள் மீது
தந்தைக்கு என்றும்
உண்டு தனிகவனம்!
பெண்ணாக இருந்தாலும்
எல்லா மகளும்
திருமகள் தான்!
அவள்,
இல்லத்தை களிப்பாக்கும்
கலைமகள்,
உள்ளத்தில் துணிவூட்டும்
மலைமகள்,
மொத்தத்தில்
முப்பெரும் தேவிகளாய்
முப்பரிமாணம் கொண்டு திகழும்
ஒப்பற்ற ஒரு மகள்!
மகள்களைப் பெருமைப் படுத்தவே
தமிழன் - பெண்களை
மகளிர் என்று
சிறப்பித் திருக்கிறான்!
மகள்...
அவள்
சிறகின்றிப் பறக்கும்
வண்ணப் பறவை
பெருமையாய் உணரவைப்பாள்
தந்தை உறவை
மகள் சொன்னால்
தென்றலையும் நீ சிறை வை
மகள் தானே தந்திடுவாள்
என்றும் உனக்கு மன நிறைவை!
ஒரு நாள்,
பிரிந்து செல்லும்
நேரம் வரலாம்,
வெவ்வேறு திசையில்
பறந்து செல்லும்
காலமும் வரலாம்,
உயரம் தூரம்
எதுவென்றாலும்,
கூட்டை மறவா
பறவை அவர்கள்,
வாழ்க்கைப் பயணம்
முழுதும் உவகை
ஊட்டும் சிறந்த
உறவே அவர்கள்!
எத்தனை வயதானாலும்
மகள்கள்
மகள்களே!
பெண்களைப் போற்றுவோம்
மகள்களை முன்னேற்றுவோம்!
மகள்களைப் பெற்ற பெருமையுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.