மரணம் என்பது
உடலுக்குத் தண்டனை
உயிருக்கு விடுதலை - உன்
உறவுகளுக்குத் தண்டனை - உள்
உணர்வுகளுக்கு விடுதலை!
மரணம் என்பது,
சிலருக்குத் தண்டனை
பலருக்கு விடுதலை,
எங்கு இருந்தாலும்
அடையும் வந்துனை
எங்கு மறைந்தாலும்
செல்லும் கொண்டுனை!
மரணம் சிலருக்கு வரமாகும்
மரணம் சிலருக்கு சாபமாகும்
வரமா? சாபமா?
ஏதோ ஒன்று - உண்டு
அனைவருக்கும் கட்டாயம்
இரண்டில் ஒன்று!
அந்த
மரணத்தின் பெயர் தான் காலன்
மறந்தும் கடமை தவறாத தர்மசீலன்,
பாவப் புண்ணியங்களின் கணக்காளன் - உயிர்
போகும் பொழுது உடன்வரும் ஒரே தோழன்!
இதுவரை சுமந்த
வாழ்க்கை பாரத்தை
இறக்கி வைக்கும்
சுமைதாங்கி கல்
இறப்பு எனும் மரணம்!
இறைவனிடம்
சரண் அடையாதவர்கள் கூட,
மரணத்திடம்
சரண் அடைந்தே தீரவேண்டும்!
அது பல சமயம்
எதிர்பாராது வரும் விருந்தாளி - நமக்கு
கடன் கொடுத்த ஒரு முதலாளி - உலகில்
வாழும் வரை நாம் கடனாளி - உணராது
வாழும் மனிதர் அனைவரும் ஏமாளி!
நமக்கு முன்னர் வந்தவர் எத்தனை கோடி
நமக்கு பின்னர் வருபவர் எத்தனை கோடி
அதற்கொரு கணக்கு கிடையாது - அதை
எவராலும் கணக்கிட முடியாது!
வருவது வந்தே தீரும்
தருவதை தந்தே தீரும்
வருவதும் பெறுவதும்
ஒவ்வொருவருக்கும்,
வாழ்க்கையில் புரிந்த புரியும்
வினைகளைப் பொறுத்திருக்கும்!
அனைவருக்கும் தெரியும்
மரணம் ஒரு நாள் நிச்சயம்
வரும் என்று
வருவதும் வந்ததும் தெரியாது,
மரணம்
அனைவரும் வாழ்வில்
பெறும் ஒன்று - அதை
பெற்றபின் பெற்றதே
பெற்றவர்க்குத் தெரியாது!
மரணம் வந்தால் அழுகின்றோம்,
நம்மை விட்டுச் சென்றதால்
அழுகின்றோமா? - இல்லை
நம்மை விட்டுவிட்டுச் சென்றதால்
அழுகின்றோமா?
ஒருவருக்கு
கிடைத்துவிட்டதால் அழுகின்றோமா?
நமக்கு கிடைக்கவில்லை என்பதால்
அழுகின்றோமா?
நமக்கு இல்லாமல்
இன்னொருவருக்கு ஒன்று கிடைத்தால் கூட
பொறாமைக் கொள்ளாமல் இருப்பது
மரணம் கிட்டும்பொழுது மட்டும் தானா?
மரணம் வந்திடும் வழிகள் எத்தனை
மரணம் தந்திடும் வலிகள் எத்தனை
மரணம் கவர்ந்த காயங்கள் எத்தனை
மரணம் நிகழ்த்தும் மாயங்கள் அத்தனை
வணங்கிநீ இருந்தாலும்
பக்தியால் அத்தனை,
தழுவித்தான் ஆகவேண்டும்
மரணமெனும் பித்தனை,
விட்டுவிடாது அது
எத்தனுக்கும் எத்தனை
வியக்கவைக்கும்
அதன் ஆற்றல் தான் எத்தனை?
பிறப்பு இறப்பு
வாழ்வின கணக்கு - இதை
மறக்காமல் இருந்தால்
வாழ்வில் பயமில்லை உனக்கு,
தவறும் தப்பும் உண்டு
மனிதனின் கணக்கில்
தவறாது நடக்கும்
தவறில்லாது இருக்கும் - அந்த
மரணத்தின் கணக்கில்!
கணிப்பொறி தேவையில்லை - அந்த
காலனுக்கு,
கணித்து வைத்திருக்கும் என்று என்ற
நாள் உனக்கு,
தப்பு ஏதும் நேர்ந்ததில்லை அதில்
இது நாள் வரைக்கும்,
தப்பித்தது யாரும் இல்லை அதனிடம்
இந்த நாள் வரைக்கும்!
மாடி மாடியாய்க் கட்டிடங்கள்
கோடி கோடியாய்ப் பத்திரங்கள்
ஏவினால் செய்திட ஆயிரம் பேர்
யாவையும் இருந்து என்ன பலன்
காலனின் காலடியில் அவை அற்பமன்றோ?
காலனை வென்றிட ஒரு
தொழில் நுட்பமுண்டோ?
விஞ்ஞானம் வியக்கும்
விசித்திரம் மரணம்
விஞ்ஞானமே வியக்கும்
அதிசயம் மரணம்,
விஞ்ஞானிகள் அஞ்சும் வகையில்
விஞ்சி நிற்பது மரணம்,
மெய்ஞானி சித்தர்களுக்கு மட்டுமே
விளங்கும் இந்த மரணம்!
அது வருவது தெரியாது
உலகில் எவருக்கும்,
வந்தது தெரியாது
யாரைத் தேடி வந்ததோ
அவர்களுக்கும்,
நம்மையும் தேடி
ஒரு நாள் வரும் அது,
நன்மையோ தீமையோ
தக்க தீர்ப்பைத் தரும் அது!
உண்மையான நீதிபதி
உலகில் மரணம் மட்டுமே,
உன் செயல்களைப் பொறுத்து
உனக்கு நியாயம் கிட்டுமே.
நடுநிலை தவறாத நடுவன் அது,
விடுமுறை எடுக்காது புரியும்
கடமை அது!
மரணம் ஒன்றை கண்டு தான்
நடுங்குமிந்த உலகம்
மரணம் ஒன்றிற்கு மட்டும் தான்
அடங்குமிந்த உலகம்
மரணம் மட்டும் இல்லையென்றால்
இந்த உலகம் இன்று இல்லை
மரணம் ஒன்றிற்கு மட்டும் தான்
மரணம் என்றும் இல்லை!
மரணம் என்ற நான்கால்
உயிர் என்ற மூன்றும்
நான் என்ற இரண்டும் சேர்ந்து
'ஐ' என்ற ஒன்றில்
அடங்கிடுமோ?
மரணம்
விடையில்லா தொரு விடுகதை
மரணம்
முடிவில்லா தொரு தொடர்கதை!
மரணம் என்பது....
தொடரும்...
(இன்னொரு கவிதையில்)
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.