Chidhambaram Natarajar Temple

இயற்கை

Mango Leaves

நறுமண இலைகள்

பூமணக்கும் நெய்மணக்கும் இலை மணக்குதே
ஏனெனக்கு இதுவரைக்கும் இது உரைக்கலை?
நாமணக்கும் தமிழிருக்கு பாட்டில் வைக்கவே
நானுனக்கு இயற்றினேனே இலையே மகிழ்ந்திடு!Tulasi Leaves

பூவை இரசித்தோம் கனியைச் சுவைத்தோம்
வேரை வியந்தோம் மரங்கள் புகழ்ந்தோம்
இலையுனை இலட்சியம் செய்ய மறந்தோம்
இலையே இல்லையே இவையேதும் நீயின்றி!

பல வண்ண இலைகள் இங்குண்டு
பல வடிவில் இலைகள் இங்குண்டு
பலன் தரும் இலைகள் இங்குண்டு - நறு
மணம் தரும் இலைகளும் இங்குண்டு!

வேப்பிலைக்கு ஒரு வாசம் உண்டு - கறி
வேப்பிலைக்கு ஒரு வாசம் உண்டு
மாவிலைக்கு ஒரு வாசம் உண்டு - சின்னத்
தேயிலைக்கும் ஒரு வாசம் உண்டு

துளசியின் வாசம் தெய்வீகம்
தூய்மை யாக்கிடும் அது மனதை
புதினா வாசம் மெய்சிலிர்க்கும்
பறித்தக் கைகளும் மணமணக்கும்!Marikozhundu Leaves

நிறைவாய் இருக்கும் மனதை நிறைக்கும்
மல்லிகைப் பூவின் நறுமணம் - சற்றும்
குறைவின்றி இருக்கும் நாசியை நிறைக்கும் - கொத்த
மல்லி இலைகளில் வரும் மணம்!

மனதை மயக்கிடும் மரிக்கொழுந்து - நறு
மணத்தைப் பரப்பி (நாசிக்கு) தரும்விருந்து - பூ
வினமோ? வியப்போம் மெய்மறந்து - நந்த
வனமாய் மாற்றிடும் அது வளர்ந்து!

மருகு எனவொரு அழகியப் பெயர்கொண்டு
முருகருக் குகந்த மூலிகை ஒன்றுண்டு
அருகே அழைத்திடும் மயக்கும் மணங்கொண்டு
மெருகு ஏற்றிடும் நுகர்ந்தால் இனம்கண்டு!

நெற்றியில் திருநீறு பூசாவிடினும் - உடல்
முற்றிலும் மணக்குமே திருநீற்றுப்பச்சை
வெற்றிலைக்கும் ஒரு மணம் உண்டு - நமைச்
சுற்றிலும் மணம்தரும் இலைக ளுண்டு!

கற்பூரவல்லி மணம் மயக்கும்
கற்பனை யுலகில் மனம்லயிக்கும்
பற்பல இலைகள் இன்னும் உண்டு
அற்புதம் இயற்கையின் படைப்பென்றும்!Karpooravalli leaf

பச்சிலை வாசம் அனைத்திற்கு முள்ளது
மெச்சிட தனிமணம் சில வற்றிற்கே - எலு
மிச்சை நாரத்தை வகை இலைகள் - தரு
மிச்சை வாசத்தை நுகர்கையிலே!

நாகத்தை விரட்டும் இலைமணம் உண்டு - நம்
நாசிக்கு அந்நெடி தெரிவ தில்லை - மனிதன்
நுகரமுடியா இலைகளின் மணம்தனை - பிற
உயிரினம் அறியும் அறிவுக் குறைந்திருந்தும்!

இலைகளுக் கித்தனை வாசமா?
களவாடித் தென்றலும் வீசுமா?
மலர்மணம் சொல்லவும் வேண்டுமோ?
பலர்மனம் மயங்கி ஏங்குமே!

மலர்களை விஞ்சிடும் விதமாய்
இலைகளில் இத்தனை மணமா?
இருக்குது மருத்தவ குணமும் - அள்ளித்
தருகுதே இயற்கை தினமும்!Thiruneetru Leaves

இலைக்கும் வாசம் உள்ளதே - சில
மலருக்கு வாசம் இல்லையே
இயற்கையின் இந்த விந்தையை
எண்ணி வியக்குது சிந்தையே!

மாவிலை வாசம் மங்கலம் கூட்டிடும்
கோவில் வாசலாய் வீட்டையும் மாற்றிடும்
வாசம் வீசும் மலர்களைக் காட்டிலும் - வாசம்
வாசம்செய்யும் இலைகளை உள்ளம் போற்றிடும்!

யானறிந்த இலைகள் சில மட்டுமே
அறியா இலைகள் எத்தனை ஆயிரமோ?
தேனருந்தும் வண்டைப் போல் நானிருந்தால்
அறியா திருப்பேனோ இவ்விலைப் பூக்களையே!

மனதை கவரும் அழகிய மலர்கள் - நறு
மணமின்றி சிலஇங்கு இருப்பதைப் போல்
மனிதராய்ப் பிறந்த பின்னரும் சிலர் - நற்
குணமின்றி இருப்பதும் உண்மை யன்றோ?

இலைகளின் மணம் நுகர்ந்து
இராம்ஸ் முத்துக்குமரன்.

தொடர்புடைய கட்டுரைகள்

Pollen Allergies

மலர்ச்சி... கிளர்ச்சி... அழற்சி... Allergy

தை தை என்றிட...

தை தை என்றிட...

Hawaii Islands

ஹாய்... ஹவாய் !!! (1)

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net