Chidhambaram Natarajar Temple

தமிழெமது தருமமுது

Tamil words for word

சொல்லின் சொற்கள்

சொற்றமிழ் சொற்கள் - 1

சொல்லின் சொற்கள்
(சொல், இன் சொற்கள்)

சிவபெருமான், சுந்தரமூர்த்தி நாயனாரைப் பார்த்து, "சொற்றமிழ் பாடுக" என்றாராம். இறைவனைப் புகழ்ந்து பாட, தமிழ்ச்சொற்கள் சிறந்தது என சிவபெருமானே கூறியிருக்கிறார் என்றால், நிச்சயம் தமிழ்ச்சொற்கள் சிறப்பானவை தான் (அது பற்றிய கட்டுரையை இங்கே படிக்கலாம்). அப்படி என்ன சிறப்பு தமிழ்ச்சொற்களில்?

ஒரு சிறப்பை மட்டும் இன்று பார்ப்போம்.

ஒரு பொருளைக் குறிப்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் எல்லா மொழிகளிலுமே உண்டு. தமிழிலும் அது போல், ஒரு பொருளைக் குறிப்பதற்கு பல சொற்கள் உண்டு. ஆனால், அப்படி உள்ள பல சொற்களை, மேலோட்டமாகப் பார்த்தால், அவை அனைத்தும் ஒரே பொருளை தருவது போலிருக்கும்.. ஆனால் சற்று கூர்ந்து நோக்கினால், ஒவ்வொரு சொல்லுக்குமே ஒரு நுண்ணிய பொருள் வேறுபாடு இருக்கும். ஆகையினால் தான் தமிழ் மொழி சிறப்பாக விளங்குகிறது.

சொற்றமிழ் என்று துவக்கத்தில் சொன்னதால், நாம் இன்று 'சொல்' எனும் தமிழ்ச்சொல்லைப் பற்றி தான் பார்க்கப்போகிறோம். சொல் என்ற இச்சொல், பெயர்ச்சொல், வினைச்சொல் என இரண்டு நிலைகளிலுமே வரும். (இது போன்ற பல சொற்கள் உள்ளன, அவற்றைப் பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்).

சொல் - பெயர்ச்சொல்

சொல் என்பது, ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகள் ஒன்று சேர்ந்து, பொருள் தரும் ஒரு சொல்லாக மாறுவது. அப்படி பெயர்ச்சொல்லாக, 'சொல்'லுக்கு பின்வரும் பல சொற்கள் உள்ளன:

சொல்
பதம் (பகுபதம், பகாப்பதம் என்று இலக்கணத்தில் படித்திருப்பீர்கள்)
கிளவி (இரட்டைக் கிளவி என்று இலக்கணத்தில் படித்திருப்பீர்கள்)
மொழி
வார்த்தை
புகல்

சொல் - வினைச்சொல்

அதே 'சொல்', வினைச்சொல்லாக வரும்பொழுது, பல் வேறு சொற்கள் உள்ளன, அவை இதோ:

சொல்
செப்பு
கூறு
பேசு
உரை
நவில்
கதை
அறை
மிழற்று
பகர்
இயம்பு
பறை
சாற்று
நுவல்
ஓது
கழறு
கரை
விளம்பு
புகல்

இந்த சொற்கள் அனைத்தும் பேசு என்னும் செயலைத் தான் குறிக்கிறது. ஆனால் இந்த சொற்கள் அனைத்திற்கும் சில நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. அவை என்ன?

சொல்   - கூறு என்பதற்கு பொதுவான சொல்
பேசு      - சொல்ல வந்ததை அல்லது சொல்ல வேண்டியதை சொல் (speak)
பகர்      - ஆதாரத்துடன் நிரூபிக்கும் வண்ணம் பேசு (speak with data)
                ஒரு விடயத்தை பொருள் உணரும் படி சொல்லுதல் பகர்தல் ஆகும்.
செப்பு   - பதில் தெரிந்து பேசு (speak with answer)
கூறு      - வரிசைப்படி விளக்கிக் கூறுவது (speak categorically)
உரை    - பொருள் உணரும்படி பேசு (speak meaningfuly)
நவில்    - நயமாகப் பேசு - கவிதை நயத்துடன் பேசுவது (speak rhymingly)
இயம்பு - இசைபடப் பேசு (speak musically)
பறை    - வெளிப்படையாக பேசு (speak to reveal)
சாற்று  - அங்கீகரித்துப் பேசு, அதிகாரப்பூர்வமாக பேசு (speak to declare)
நுவல்    - அறிமுகத்துடன் பேசு (speak with introduction)
                நவில் என்பதில் இருந்து உருவான சொல் போல் தெரிகிறது.
ஓது       - மனப்பாடம் செய்து பேசு (speak to recite)
கழறு    - கண்டிப்புடன் பேசு (speak with censure)
கரை     - அழைத்துப் பேசு(speak with calling)
விளம்பு - தகவலுடன் பேசு (speak with a message)
                விளம்பரம் என்ற சொல் இதிலிருந்து தான் வந்திருக்கும் போல்
கதை     - விளக்கமாக பேசு (Speak like telling a story)
                 (கதை சொல்லுவது போல் பேசுவது - கதைக்கிறான், கதைப்பது)
அறை    - சொல், கூற்று; (a word or sentence as uttered - not written)
மிழற்று - மென்மையாகப் பேசு (To speak softly, to prattle as a child)
புகல்     - உறுதியாக சொல்வது, declare,

இவை மட்டுமல்லாமல், 'சொல்' என்பதற்கு இணையான இன்னும் சில சொற்கள்

அறிவி   - inform, announce
தெரிவி - வெளிப் படுத்து, reveal,
உச்சரி  - spell, recite
பறை + சாற்று = பறைசாற்று என்று இரண்டும் சேர்ந்து ஒரு சொல். பறை அடித்து சொல்லுதல். எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்குமாறு சொல்லுதல்.

'சொல்' எனும் ஒரு சொல்லுக்கே இத்தனைச் சொற்கள் என்றால், மற்ற சொற்களுக்கும் இது போல் எத்தனை சொற்கள் இருக்கும். இதிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம், ஏன் சொற்றமிழ் என்று அழைக்கப்பட்டது என்று.

 

நம் இலக்கியங்களில் இச்சொற்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை சில உதாரணங்கள் மூலம் பார்ப்போம்:

 

1) சொல் - சான்றோர் கொடுத்தாரெனப்படுஞ் சொல் (நாலடி,100)
என்சொற் கடந்தா லுனக்கியாதுள தீனமென்றான் (கம்பரா. நகர்நீங்கு. 140)
தந்தைசொல் மிக்க மந்திரமில்லை - கொன்றைவேந்தன்
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். ( குறள் - 70)

2) பேசு - எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் (திருப்பாவை-14)
பேசாத நாளெல்லாம் பிறவாநாளே (தேவா. 12, 1).
வாளினாற் பேசலல்லால் (சீவக.257).

3) பகர் - பாழிமையான கனவில் நம்மைப் பகர்வித்தார்(பெரிய திருமொழி 11-2-6)
சிந்தாமணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே (திவ். திருவாய். 6, 10, 9)

4) செப்பு - தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்(திருப்பாவை 5)
ஏதுபோ லிருந்த தைய னிசைத்தசெப்பென்றார் (திருவிளை. வளையல். 9)
செப்பு மொழி பதினெட் டுடையாள் - பாரதியார்.

5) கூறு - பல்லாண்டு கூறுவனே (திருப்பல்லாண்டு -8)
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. (குறள் - 100)

6) உரை - நாமமென்று நவின்று உரைப்பார்கள் (பெரியாழ்வார் திருமொழி (5-1-10)
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு உரை (நற்:236:5-6).

7) நவில் - நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்(திருப்பாவை - 9)
நா நவில் பல் கிளை கறங்க நாவுடை (நற்:42:4)

8). இயம்பு - எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பிய சொல் (கம்பராமாயணம் - பாலகாண்டம்)
வைதிக மார்க்கத்து அளவை வாதியை எய்தினள்
எய்தி நின் கடைப்பிடி இயம்பு என" (மணி:27:3-4)
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும் பெரும் புலர் விடியலும் (குறு:234:4-5).

9) பறை - அறைபறை மாயன் மணி வண்ணன்(திருப்பாவை - 16)
கயிறு ஆடு பறையின் கால் பொரக் கலங்கி வாகைவெண் நெற்று ஒலிக்கும் (குறு:7:4-5)

10) சாற்று - தையில் மகத்துக்கு சாற்றுகின்றேன் (உபதேச ரத்தின மாலை 12)
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன். (குறள் - 1212)

11) நுவல் - நோயது நுவலென்ன நுவலாதே (திருவாய்மொழி 1-4-8)
பருகியு மமையாது நுவலு மமைதிய (ஞானா. 25, 6).

12) ஓது - ஏது பெருமை இன்றைக்கு என்னில் ஓதுகின்றேன் (உபதேச ரத்தின மாலை 8 )
ஓது அரும் வேறு பல் உருவின் ஏர் தரும் மழையே (நற்:237:9-10).
நூறு நாளோதி யாறுநாள் விடத்தீரும். The traces of learning made in a hundred days will be effaced by indolence in six.

13) கழறு - காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே(திருவாய்மொழி 6-2-4)
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇ (குறு:158:2).
கல்லென்று தந்தை கழற (நாலடி, 253)

14) கரை - கரையாய் காக்கைப் பிள்ளாய் (பெரிய திருமொழி 10-10-2)
மாற்றம் நுவற்சி செப்பு உரை கரை…சொல்லே (நன்:458)
அஞ்சிலோதியை வரக்கரைந் தீமே (ஐங்குறு. 391).

15) விளம்பு - விளம்பும் ஆறு சமயமும் (திருவாய்மொழி 4-10-9)
மெய்ப்பட விளம்பு என விளம்பல் உறுவோன் (மணி:27:170).

16) கதை - கதையுங் திருமொழியாய் நின்ற திருமாலே (திவ். இயற்.2, 64)
கதையெனக் கருதல்செய்யான் மெய்யெனத் தானுங்கொண்டான் (சீவக. 2144)

17) அறை - ஆசைபற்றி யறைய லுற்றேன் (கம்பரா. சிறப்புப். 4).
அறைபடு மாலைகள் (கந்தபு.நாட்டு.31)

18) மிழற்று - பண்கள் வாய் மிழற்றும் (கம்பரா. நாட்டு. 10)
யான்பலவும் பேசிற்றானொன்று மிழற்றும் (சீவக. 1626)

19) புகல் - யாக்கை சொல் வெற்றி குதிரும் புகலே (நிக.பி:10:818).
ஆய இசைப் புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து (பெரிய:956).

20) பதம் - செளிசிறார் பதமோதும் திருத்தோணிபுரத்து (தேவா. 88, 2)

21) கிளவி - இனையள் என்று அவட் புனைவு அறியேன் சில மெல்லியவே கிளவி (குறு:70:3-4).
உடம்பட்டு நீப்பார் கிளவி (கலி:113:15)
அகப்பொருட்டுறை. களவிற்குரிய கிளவித்தொகை (நம்பியகப். 123).

22) மொழி - மொழி பெயர் தேஎத்த ராயினும் (குறுந். 11)
மறைமொழி தானே மந்திர மென்ப (தொல். பொ 481)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (குறள் - 28)

23) வார்த்தை - ஓர் வாணிகனை யாட் கொண்ட வார்த்தை (தேவா. 414,7)

 

மற்ற மொழிகளில் இந்த சொல்லாக்கம், இத்தனைப் பொருள் தரும் சொற்கள் இருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக சொல்லலாம், இல்லை இல்லை, பெருமையாகப் பறைசாற்றலாம்.

மீண்டும் இன்னொரு சொற்றமிழ் பதிவில் சந்திக்கலாம்.

அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.

தொடர்புடைய கட்டுரைகள்

adhu

"அது"

Maruu - Grammar

மரூஉ

ஓம் நமசிவாய போற்றி!!!

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net