ஈரெழுத்துக் கொண்ட ஒரு சொல் எது?
பேருதவிப் புரியும் சிறு சொல் எது?
யார் சொல்லொன்றை மறந்தாலும்
வரும்சொல் எது?
ஆபத்பாந்தவனாய் வந்துதவும்
உயர்ந்தச் சொல் தான் "அது".
சொல்லத் தயங்கிட வரும் சொல் "அது"
சொல்ல முயன்றிட வரும் சொல் "அது"
சொல்லை மறந்தால் வரும் சொல் "அது"
சொல்லப் பயந்தாலும் வரும் சொல் "அது".
நெஞ்சம் மயங்கினால் வரும் சொல் "அது"
கொஞ்சம் குழம்பினால் வரும் சொல் "அது"
நெஞ்சம் ஏங்கினால் வரும் சொல் "அது"
கொஞ்சிக் குலவிட வரும் சொல் "அது".
சலனம் கொண்டால் வரும் சொல் "அது"
சபலம் கொண்டாலும் வரும் சொல் "அது"
கவனம் கலைந்தால் வரும் சொல் "அது"
கவலை மிகுந்தாலும் வரும் சொல் "அது".
ஆசையை வெளிப்படுத்த வரும் சொல் "அது"
யாசிக்கும் பொழுது வருகின்ற சொல் "அது"
ஓசை குறைந்தாலும் அதிகம்
ஒலிக்கும் சொல் "அது"
யோசிக்கும் பொழுது வரும்
முதல் சொல் "அது".
யார் என்று கேட்க
முந்திக் கொண்டு வரும் "அது"
பேர் மறந்துப் போனாலும்
கைக்கொடுக்கும் "அது"
பாரில் உள்ள மொழிகளில்
இருக்கலாம் "அது"
வேறும் எம்மொழிக்கும் இல்லாச் சிறப்பு
தமிழில் உள்ள "அது".
ஆறறிவு இல்லா ஒன்றைக் குறிப்பது
ஆறறிவு இருந்தும் இல்லாதோர்
பெறும் மதிப்பது
ஓருருவம் இல்லா ஒன்றைக் குறிக்கும் "அது"
ஒருருவம் இருந்தாலும் குறிக்கத்
துணை வரும் "அது".
சிறியோர் முதல் பெரியோர் வரை
அனைவரும் அதிகம் பயன்படுத்தும்
அரிய சொல் "அது"
கற்றோர் ஆயினும் கல்லாதோர் ஆயினும்
அனைவருக்கும் உதவி புரியும்
எளிய சொல் "அது".
பல சமயம் இணைந்து வரும்
"அது" உடன் "வந்து"
தகுந்த சொல்லைத் தேட
வாய்ப்பு ஒன்று தந்து
விக்கி இருக்கும் போது
நீர் தானே மருந்து
திக்கித் தவிக்கும் போது - உதவ
'அது" வருமே விரைந்து!
அஃறிணை ஒருமைச் சுட்டுப்பெயர் "அது"
ஆறாம் வேற்றுமை ஒருமையுருபு "அது"
அஃது எனவும் சிலசமயம் வரும் "அது"
ஆயுதம் எனவெண்ணி 'ஃ' கை கைவிட்ட
அகிம்சைச் சொல் தான் "அது".
ஒருமையைக் குறிக்கும் ஒப்பற்றச் சொல் "அது"
வளமையானத் தமிழின் வரம்பற்றச் சொல் "அது"
பெருமை மிகுந்த அரும்பெருஞ் சொல் தான் "அது"
புலமைப் பெற்றோரும் புகழும் சொல்லன்றோ "அது"!
நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்.