Chidhambaram Natarajar Temple

மற்ற கவிதைகள்

Thiru Vijayakanth

கருப்பு நிலா

நடிகர், தேமுதிக கட்சித்  தலைவர் திரு விஜய்காந்த்
(25.8.1952 ‍- 28.12.2023)

 

'தூரத்து இடிமுழக்கம்' ஒன்று
இன்று ஓய்ந்துவிட்டது,
'ஊமை விழிகள்' இரண்டு
மூடிக்கொண்டன!

'நெஞ்சிலே துணிவிருந்தால்"
'வெற்றி' நிச்சயம்
என்று முழக்கமிட்டவர்,
"நாளை உனது நாள்" என்று
நம்பிக்கை ஊட்டியவர்,

"நானே ராஜா நானே மந்திரி"
என 'ராஜ நடை" போட்டு
'சாட்சி'யாக
வாழ்ந்துக் காட்டிய "நல்லவன்",

ஒரு காலத்தில்
"கோயில் காளை" போல‌
சுற்றித் திரிந்தாலும், பின்
'ஹானஸ்ட் ராஜாய்' மாறிய‌
'கருப்பு நிலா',

'வானத்தைப் போல'
வாழ்ந்த 'சொக்கத் தங்கம்',
"ஏழை ஜாதி'க்கு உதவிய‌
'நிறைஞ்ச மனசு'டைய‌
'பொன்மனச் செல்வன்',
தமிழகம் எனும்
"பூந்தோட்டக் காவல்காரன்"
இன்று இந்த
பூவுலைகை விட்டு
மறைந்துவிட்டார்!

இவர்,
நிஜ வாழ்வில்
நடிக்கத் தெரியாத‌
ஒரு நல்ல நடிகர்,
மேடையில் வேடம்
போடத் தெரியாத‌
நல்ல மனிதர்,

திரையில் மட்டுமல்ல ‍
பொது வாழ்வில் - வாழ்ந்த‌
முறையிலும் அவர் நல்லவர்,
உதவி என்று நாடி வந்த
எல்லோருக்கும் உதவிய‌
மனித நேயம் மிக்க வல்லவர்!

தமிழ்ப்படங்களில் மட்டுமே
நடித்த உண்மையான‌
உன்னத தமிழர்!

உண்மைகளை
உரக்கச் சொன்ன‌
உத்தம நடிகர்,
தவறென்றால்
தயங்காமல் தட்டிக் கேட்ட
தன்னலமற்ற தலைவர்!

பசி என்று வந்தவர்களுக்கு
பரிவோடு உணவளித்த‌
பாசமிக்கவர்!

உதவி என்று வருபவர்களுக்கு
கொடுத்து கொடுத்து சிவந்த
கரங்களுக்குச் சொந்தக்காரர்,
கொடுமைக் கண்டு கொதித்தெழுவதால்
கோபக் கனல் அவர்
கண்களில் சிவப்பாகத் தெரியும்,
கோபம் இருக்கும் இடத்தில்
குணம் இருக்கும் என்பதும்
அவரை கண்டால் புரியும்!

உருவ கேலி மட்டுமல்லாது
உணர்வுகளை கேலி செய்து,
நோகடிக்கப்பட்டு
நோய்வாய்ப்பட வைக்கப்பட்ட‌
நேர்மையானவர்!

அவரின்
நியாயமான கோபத்தை
அநியாயமாக காட்சிப்படுத்தி
அரசியலில் இருந்து
அநாகரிக முறையில்
அடாவடியாக
அப்புறப்படுத்தப்பட்டவர்!

சில நயவஞ்சக ஊடகங்களால்
வஞ்சிக்கப்பட்ட‌
அஞ்சா நெஞ்ச‌முடையவர்!

தனது
கல்யாண மண்டபம்
இடிக்கப்பட்ட போது கூட
விழிகள் கலங்கினாலும்
மனது கலங்காமல் கருங்
கல்லைப் போல்
உறுதியாய் நின்றவர்!

சாமான்ய மனிதனாக இருந்து
சமத்துவ தலைவனாக உயர்ந்து
சட்டசபை எதிர்கட்சி தலைவராக‌
சாதித்துக் காட்டியவர்!

திரையுலகில்
முகம் தெரியாத பல‌
முயற்சியாளர்களுக்குப் புது
முகவரி கொடுத்தவர்!

காவல் அதிகாரி என்றாலே
இப்படி தான் இருக்கவேண்டும் என்று
தன் கதாபத்திரங்களால்
ஆவல் கொள்ள வைத்தவர்!

தேசப்பற்றை பறைசாற்றும்
வீர வசனங்களை ‍ தன் படங்களில்
உதட்டளவில் சொல்லாமல்
உள்ளப்பூர்வமாக உணர்ந்து சொன்ன
உயர்ந்த மனிதன்!

திராவிடம் என்று பேசாமல்
தேசியமும் வேண்டும் என்று
சிந்தித்து பெயர் வைத்த‌
புரட்சிக் கலைஞன்!

இரண்டு பெரும் பாறைகளுக்கு
இடையில் முளைத்து - பரந்து
கிளை விடும் முன்பே,
வெட்டி சாய்க்கப்பட்ட‌
அதிசய‌ மரம்!

இன்று
உயிரிழந்தாலும் பல கோடி
உள்ளங்களை வென்ற
உண்மையானக் Captain இவர்,
திரையுலகிலும்
அரசியலிலும் இந்த‌
Captain தான் என்றும்
Man of the Match!

இனி
'முரசு' ஒலி சத்தத்தில் எல்லாம்
இவரின் கம்பீர‌
குரலொலி கேட்கும்!

அன்னாரது ஆத்மா
அமைதி பெறட்டும்!

இராம்ஸ் முத்துக்குமரன்!

தொடர்புடைய கட்டுரைகள்

adhu

"அது"

Annamalai and Modi

தாமரைச் செல்வன்!!!

One in Podium

"ஒரு" என்ற ஒன்று

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net