ஒன்று என்பது ஒரு சிறிய எண் என்று சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். ஒன்று என்ற அந்த ஒரு எண்ணில், ஒன்றல்ல, எண்ணற்ற சிறப்புகள் இருக்கிறது. அந்த ஒன்று இல்லாமல் ஒன்றுமே இல்லை, எந்தவொரு எண்களும் இல்லை. ஒன்றோடு ஒன்று சேரசேரத் தான் எண்களே உருவாகிறது. ஒன்று என்ற ஒன்றிற்குத் தான் என்றும் மதிப்பு உண்டு. ஒன்றிலிருந்து ஒன்றைக் கழிக்க கழிக்க, இறுதியில் அந்த ஒன்று கூட இல்லாமல் போய்விடுகிறது. "Infinity" எனும் "முடிவிலி" யோடு கூட ஒன்றை சேர்த்துக் கூட்ட முடியும். அப்படி சிறப்பு வாய்ந்தது இந்த ஒன்று. தனிமரமாகத் தெரியும் ஒன்று, ஆனால் அந்த ஒன்றோடு ஒன்று சேர்த்தால், இரண்டாகவும் மாறும், பதினொன்றாகவும் தெரியும். ஒன்று எண்களுக்கு பலமும் தரும், துணையாகவும் வரும்.
அப்படி சிறப்பு மிக்க ஒன்றைப் பற்றி தான் இக்கவிதையில் பார்க்கப்போகிறோம்...
"ஒரு" என்ற ஒன்று....
ஒரு 'ஒரு' சிறு கரு - அவ்
ஒரு கரு பல உரு பெறும் - அவ்
ஒரு உரு பெருமதிப் புறும் - அவ்
ஒரு 'ஒரு' அரும் பொருள் தரும்!
ஒரு விதை தான் விருட்சமாகிறது
ஒரு புன்னகை நட்பை வளர்க்கிறது
ஒரு மன்னிப்பு பகையை விரட்டுகிறது
ஒரு கண்டிப்பு தவறை தடுக்கிறது,
ஒரு வதந்தி ஊரை எரிக்கும்
ஒரு தீப்பொறி காட்டையே எரிக்கும்
ஒரு தயக்கம் வெற்றியைப் பறிக்கும்
ஒரு துரோகம் நட்பை முறிக்கும்,
ஒரு தீச்சுடர் இருளை விரட்டும்
ஒரு பேரிடர் புவியைப் புரட்டும்
ஒரு நற்சொல் நம்பிக்கையைக் கொடுக்கும்
ஒரு நம்பிக்கை புதுவாழ்க்கையைக் கொடுக்கும்,
ஒரு நெல்மணி பறவைப் பசியைப் போக்கும்
ஒரு விபத்து வாழ்வின் திசையை மாற்றும்
ஒரு ஓட்டை பெரியக்கப்பலை மூழ்கடித்து விடும்
ஒரு ஓட்டு நாட்டின் ஆட்சியையே மாற்றி விடும்,
ஒரு இலட்சியம் உன் வாழ்வை உயர்த்தும்
ஒரு அலட்சியம் பலர் வாழ்வை அழிக்கும்
ஒரு நல்ல நோக்கம் உத்வேகம் கொடுக்கும்
ஒரு நல்ல மாற்றம் முன்னேற்றம் கொடுக்கும்,
ஒரு சிறுஎழுத்து பொருளை மாற்றிவிடும்
ஒரு கையெழுத்து பலர் தலையெழுத்தை மாற்றிவிடும்
ஒரு சிறு ஊசி துணிகளை தைக்க உதவும்
ஒரு சிறு தூசி விழிகளை உறுத்தி வறுத்தும்,
ஒரு உளி பாறையைச் செதுக்கும்
ஒரு துளி வெள்ளமாய்ப் பெருகும்
ஒரு ஏணி பலரை ஏற்றி விடும்
ஒரு ஏரி பலர்தாகம் போக்கி விடும்,
ஒரு சிட்டிகை உப்புக் கூடினால் சுவை கெட்டுவிடும்
ஒரு துளி நஞ்சு கலந்தால் உணவே நச்சாகிவிடும்
ஒரு சின்ன தப்பு வாழ்வைத் துயரமாக்கி விடும்
ஒரு நல்ல நட்பு வாழ்வின் துயரம்போக்கி விடும்
ஒரு சிறுபுள்ளி வைததால் எண்களின் மதிப்பு மாறும்
ஒரு நல்மதிப்பு உங்களை பெரும்புள்ளியாய் மாற்றும்
ஒரு மதிப்பெண் வெற்றித்தோல்வியை நிர்ணயிக்கும்
ஒரு மதிப்பு இல்லையென்றால் காக்கைக்கூட களிறைக் கொத்தும்,
ஒரு தீச்சொல் பலவருட உறவைக் கெடுக்கும்
ஒரு தீமை பல்லாயிர உயிரைக் அழிக்கும்
ஒரு அணு குண்டு ஊரை மயானமாக்கும்
ஒரு நற்தொண்டு ஊரை மனிதமாக்கும்,
ஒரு திறவுகோல் பூட்டைத் திறக்கும்
ஒரு செங்கோல் நாட்டைக் காக்கும்
ஒரு நாக்கு மனிதனை ஆட்டி வைக்கும்
ஒரு வாக்கு மனிதனைக் கட்டி வைக்கும்,
ஒரு நூல் கிழிந்ததை தைக்கும்
ஒரு நூல் அறிவை வளர்க்கும்
ஒரு வருடம் வயதை உயர்த்தும்
ஒரு நெருடல் மனதை உறுத்தும்
ஒரு அடி வைத்து தான் பயணம் தொடங்கும்
ஒரு நொடி கவனம் சிதறினால் பயணம் முடிந்துவிடும்
ஒரு குடிப் பழக்கம் பலர்குடியைக் கெடுக்கும்
ஒரு பிடி சாம்பல் தான் இறுதியில் எவர்க்கும்,
ஒரு சூரியன் உலகை வெளிச்சமாக்குகிறது
ஒரு நிலவு இரவில் வழியைக்காட்டுகிறது
ஒரே ஒரு வானம் தான் அண்டம் முழுதும்
ஒரே ஒரு பூமி தான் நமக்கும் எப்பொழுதும்,
ஒரு உயிர் உனக்குள் ஒளிந்திருக்கும்
ஒரு நொடி உன்னைவிட்டு பிரிந்துவிடும்
ஒரு நாள் உன்னையே மாற்றிவிடும்
ஒரு நாள் உன்வாழ்வே முடிந்துவிடும்,
ஒரு 'ஒன்று' இன்றி முதல் பரிசு இல்லை
ஒரு 'ஒன்று' இன்றி முதல் இடமும் இல்லை
ஒரு "ஒன்று' இன்றி முதல் எதுவும் இல்லை - அந்த
'ஒன்று'க்கும் மட்டுமே முடிவு என்றும் இல்லை,
ஒரு 'ஒன்று' என்றும் சிறியதில்லை - அந்த
ஒரு 'ஒன்று' இன்றி எதுவும் பெரியதில்லை
ஒன்றை விட ஒன்று சிறியதா? பெரியதா?
ஒவ்வொன்றிற்கும் ஒன்றுண்டு புரியுதா?
ஒரு 'ஒன்று' என்பது வெறும் எண் தான் - அந்த
ஒன்று என்றும் அனைத்தையும் வென்று விடும்
'ஒரு' என்ற சொல் தமிழில் சிறப்பைக் குறிக்கும்
எண்ணிப் பார்த்தால்
'ஒரு' என்ற எண்ணும் சொல்லும் - நம்
மனதையே பறிக்கும்!
ஒரு என்ற ஒன்று தனித்துவமானது
ஒரு என்ற ஒன்று மகத்துவமானது
ஒரு என்ற ஒன்று சமத்துவமானது
ஒரு என்ற ஒன்று தத்துவமானது!
ஒரு வியப்புடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.