தமிழ் தான் சிவனுக்குப் பிடித்த மொழியாம். இதை நான் கூறவில்லை. திருஞான சம்பந்தர், தமது தேவாரப் பாடலில் இவ்வாறு கூறுகிறார். தான் ஏன் தமிழில் பதிகங்கள் பாடினேன் என்பதை, திருஞானசம்பந்தர், இந்தப் பாடலில் விளக்குகிறார். தான் பாடும் பாடல்கள் எதுவும் தமதில்லை என்றும், எல்லாம் இறைவனுடையது என்கிறார். இறைவன் எனக்குள்ளே அமர்ந்து எழுதுவதை தான், நான் இந்த உலகுக்கு வழிமொழிகிறேன் என்கிறார் சம்பந்தர்.
இந்தப் பாடலில் இன்னுமொரு சிறப்பு இருக்கிறது. இந்த நாலு வரிப் பாடலில், 'ழ'கரம் மொத்தம் 22 முறை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இந்தப் பாடலைத் தினந்தோறும் படித்தால், 'ழ'கரம் உச்சரிக்க வராது நாக்கு கூட, 'ழ'கரத்தை அழகாக சொல்லி சுழலும்.
அந்தப் பாடலைப் பார்ப்போமா?
தேவாரம் - மூன்றாம் திருமுறை - பதிகம் 67
ஒழுகலரி தழிகலியி லுழியுலகு பழிபெருகு வழியைநினையா
முழுதுடலி லெழுமயிர்க டழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகி லிழுகுமல மழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகண் மொழிதகையவே!
சற்று பிரித்துப் படித்துப் பார்ப்போம்:
ஒழுகல் அரிது அழி கலியில் உழி உலகு பழி பெருகு வழியை - நினையா
முழுதுடலில் எழு மயிர்கள் தழுவு முனி குழுவினொடு கெழுவு - சிவனைத்
தொழுது உலகில் இழுகு மலம் அழியும் வகை கழுவும் உரை - கழுமல நகர்ப்
பழுதில் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழி கண் - மொழி தகையவே!
விளக்கம்:
நல்லொழுக்கத்தைப் பற்றி ஒழுகுவது மிகவும் அரிதாக மாறிவிட்ட கலியுகத்தில், தர்மம் நாளுக்கு நாள் அழிகின்ற கலியுகத்தில், மனிதர்களால் பெருகும் பழி பாவங்களை நினைத்து, வருந்தியவராக, தனது உடல் முழுவதும் ரோமங்கள் கொண்டவரான உரோமச முனிவர், தனது சீடர்களுடன் தங்கி சிவபெருமானைத் தொழுத இடமான சீர்காழி எனும் திருத்தலத்தில், உலக இச்சைக்கு இழுக்கின்ற மலங்கள் நீங்கி சிவஞான உபதேசம் பெற்றதால் கழுமலம் எனப் போற்றப்படும் திருத்தலத்தில், குற்றமில்லா சொற்கள் உடையத தமிழ் மொழியில் இறைவன் எழுதியப் பாடல்களை, வழிமொழிகிறேன். தேவாரப் பாடல்களும், வேதங்களுக்கு இணையாக, வேதங்கள் அளிக்கும் பலன்களைத் தரவல்லது என்பதை உணர்த்தும் வகையில், அதே சமயத்தில் மக்கள் கற்றுக்கொள்ளும் விதத்தில் மாறுபட்டவை என்பதை உணர்த்தும் வகையில், எழுதும் மொழி என்று தமிழில் பாடியத் தேவாரப் பாடல்களை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகிறார்.
இங்கே, ஒழு, அழி, உழி, பழி, வழி, முழு, எழு, தழுவு, குழு, கெழுவு, தொழுது, இழுகு, அழியும், கழுவு, கழுமல, பழுது, எழுது, மொழி, தமிழ், வழி, மொழி, மொழி என மொத்தம் 22 முறை 'ழ'கரம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
அருஞ்சொற்பொருள்:
ஒழுகல் - நல்லொழுக்கத்தில் நடத்தல்
அழி - அழிவு
கலி - கலியுகம்
உழி உலகு - திரியும் உலகில்
பழி - பாவங்கள்
வழி - நடை, நடக்கின்ற
நினையா - நினைத்து வருந்தி
முழு - முழுமை
எழு - எழும்பிய, நிறைந்த
தழுவு - தழுவதல், சூழ்ந்த
கெழுவு சிவனை - உறையும் சிவனை
தொழுது - வணங்கி
இழுகு - இழுக்கும், நல்லொழுக்கத்திலிருந்து வழுக்க செய்யும்
கழுவு - நீக்கு
கழுமலம் - சீர்காழி. சிவனை வணங்கி தொழுது, தனது மலங்கள் நீக்கப்பட்டு(கழுவப்பட்டு)
உரோமச முனிவர் சிவஞானம் பெற்றதால், இத்தலம் கழுமலம் எனப் பெயர்
பெற்றதாக திருஞானசம்பந்தர் கூறுகிறார்.
பழுதில் - பழுது இல்லாத, குற்றமில்லாத
விரகன் - வல்லமை பொருந்தியவன்
வழிமொழி - ஒருவர் முன்னே கூறியதை ஆதரித்து கூறுவது
கண் - அருள், ஏழாம் வேற்றும உருபு
மொழி தகை - தகைமொழி, மங்கல மொழி
நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்.