குற்றாலக் குறவஞ்சி - இயற்றியவர் - திரிகூடராசப்பக் கவிராயர்.
திருக்குற்றாலக் குறவஞ்சி யென்னும் இந்நூல் திரிகூடராசப்பக் கவிராயரவர்களால், இன்றைக்கு ஏறக்குறைய முன்னூறு நானூறு ஆண்டுகட்குமுன் இயற்றப்பெற்ற அரிய நூலாகும். இது, திருக்குற்றால நகரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானாகிய திரிகூடநாதரைத் தலைவராகக் கொண்டு பாடப்பெற்றது; சொல்லழகு பொருளழகு மற்றும் கருத்தாழம் மிக்கது; ஓசையின்பமும் எளிய இனிய நடையும் வாய்ந்தது. அதிலிருந்து இரண்டு பாடல்களை மட்டும் இன்று பார்க்கலாம்.
குற்றால வளம்
குற்றாலம், மலைவளம், நீர்வளம், நிலவளம் முதலிய பல வளங்களைக் கொண்டது. காண்பவர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் பேரெழில் கொண்ட ஓர் இடமாகும். அது மட்டுமன்றி முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பேறு பெற்றத் தலமாகும். எல்லா நோய்களையும் போக்கும் வண்ணம் மூலிகை கலந்து விழும் அருவி நீரில் குளிப்பவர்கட்கு, அதிலிருந்து வெளிவரவே மனமிருக்காது. அத்தகைய சிறப்பு வாய்ந்தது குற்றாலம்.
மக்கள் பெருக்கம், விஞ்ஞான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சுழல் மாசுப்பட்டதாலும், திரிகூடராசப்பர் பாடியபொழுது இருந்த செழிப்பும் வளமும் இல்லையென்றாலும், இன்றைய காலக்கட்டத்திலும் குற்றாலம் காண்பவர் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் தான் இருக்கிறது. இன்றும், தென்மேற்குப் பருவமழை துவங்கியவுடன், நாடுமுழுவதும் பல இடங்களிலிருந்து குற்றால அருவியில் நீராட மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க குற்றாலத்தில் வாழ்ந்த மக்கள பற்றியும் அவர்களின் வாழ்கை முறையையும் விளக்கமாக கூறும் நூல் இது.
வாருங்கள் திரிகூடராசப்ப கவிராயர் சுவையுடன் சொல்லும் குற்றால் அழகைப் படித்துச் சுவைக்கலாம். தென்றலோடு தமிழும் சேர்ந்து தவழும் குற்றாலம்:
குற்றால மலைவளம், நாட்டு வளம் சொல்லும் பாடல்:
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழிஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே. (54.1)
அருஞ்சொற்பொருள்:
வானரம் - குரங்கு (இவ்விடத்தில் ஆண் குரங்கு)
மந்தி - பெண் குரங்கு
வான்கவி - வானத்தில் உள்ள தேவர்கள்
கானவர் - வேடர்
கமனம் - நடை, செல்லுகை
கமனசித்தி - காற்றில் அல்லது வானில் நடந்து செல்லுதல்
காயசித்தி - உடலை அழியாது நிலைக்கச் செய்தல்
விளைப்பார் - உடலை அழியா நிலைக்கு எடுத்து செல்ல உதவும் முலிகைகளை விளைவிப்பது
ஒழுகும் - பெய்யும்
செங்கதிரோன் - சூரியன்
பரி - குதிரை
வழுகும் - வழுக்கும்
கூனல் - வளைந்த
பிறை - நிலா
வேணி - பின்னல் சடை
வேணியலங்காரர் - சிவபெருமான்
பொருளுரை
இந்தக் குற்றால மலையில், ஆண் குரங்குகள் பலவகைப் பழங்களைப் பறித்துக் கொடுத்துப் பெண் குரங்குகளோடு கொஞ்சி மகிழ்கின்றன; அக்குரங்குகளால் சிதறியெறியப்படுகின்ற பழங்களை வானுலகத்தில் வாழும் தேவர்கள் இரந்து இரந்து வேண்டிக் கேட்பார்களாம். அப்போது வனவேடர்கள் தம் கண்களால் ஏறெடுத்துப் பார்த்து. உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்களாம். அதே சமயம், வானின் வழியாகச் செல்கின்ற சித்தர்கள் கீழிறங்கி வந்து காயசித்தி மருந்துகளாகிய வன மூலிகைகளை குற்றால மலையில் வளர்ப்பார்கள்; தேன் கலந்த மலையருவியினது அலைகள் மேலெழுந்து வானத்தினின்றும் வழிந்து ஓடும்; அதனால் செந்நிறச் சூரியனின் தேரில் பூட்டிச் செல்லும் குதிரைக் கால்களும் தேர்ச்சக்கரமும் வழுக்கி விழும்; வளைந்துள்ள இளம் பிறையைச் சூடியிருக்கின்ற சடைமுடியையுடைய அழகரான திருக்குற்றால நாதர் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றாலமாகிய இச் சிறப்புவாய்ந்த திரிகூடமலை, எங்களுக்குரிமையான, நாங்கள் வாழ்கின்ற மலையாகும்.
என்னவொரு அழகான கற்பனை. இந்தப் பாடலைக் கேட்க்கும்பொழுது, கண் முன்னே குற்றாலக் காட்சி விரிகிறது, அந்த அழகு தெரிகிறது. உடனே குற்றாலத்திற்கு செல்லும் ஆவல் பிறக்கின்றது. உங்களுக்கு?
தலைவியின் அழகைச் சொல்லும் பாடல்:
அத்தகைய குற்றால மலையில், இக்கதையின் தலைவி வசந்தவல்லி பந்து விளையாடும் அழகை வர்ணிக்கும் புலவரின் பாடலைப் பாருங்கள்:
பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு
புரண்டாடக் - குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை
வண்டோட - இனி
இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிடை
திண்டாட - மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே; (20.2)
இப்பாடலை படிப்பதற்கு எளிதாக பின்வருமாறு மாற்றிப் படிக்கலாம்:
பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாடக் - குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட - இனி
இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிடை திண்டாட - மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே;
என்ன அழகானச் சொற்கள்... என்ன இனிமயான சந்தம். படிக்கும் பொழுதே, நமையறியாமல் இசையும் தானாக சேர்ந்துவிடுகிறது.
அருஞ்சொற்பொருள்
பொங்கு - எழுதல்
கனங்குழை - பெண்கள் காதுகளில் அணியப் பெறும் கனமான அணி
மண்டிய - மிகுந்த
கெண்டை - ஓரு வகை மீன்
குழல் - கூந்தல்
மங்குல் - மேகம், இருள்
மதன் - மன்மதன்
சிலை - இவ்விடத்தில் வில் எனும் பொருளில் வருகிறது
பங்கயம் - தாமரை
மங்கை - இளம் பெண்
சவுந்தரி - அழகி
பயின்றாள் - விளையாடினாள்
பொருளுரை
குற்றாலம் என்னும் நகரில் வசந்தவல்லி என்னும் அழகியப் பெண் பூக்களால் செய்யப் பெற்ற பல பந்துகளை மேலே எறிந்து விளையாடத் தொடங்கினாள். மேலே சென்ற பந்துகளைக் கீழே விழுந்துவிடாமல் கவனித்து, குதித்து, நகர்ந்து விளையாடினாள். அதனால் அவள் உடல் அதற்கு ஏற்றபடி மேலும், கீழும், பக்கத்திலும் அசைந்து ஆடியது.
அவளின் காதுகளில் அணிந்திருந்த, கனத்த, அழகிய குழை என்னும் காதணிகள் மேலெழுந்து ஆடின. ஆடும் பொழுது அவளுடைய நெருங்கிய அழகியக் கண்கள், இங்கும் அங்கும் பார்த்தன. அவை கெண்டை மீன்கள் துள்ளுவது போல பந்துகள் செல்லும் திசை நோக்கிச் சென்றன.
அவளின் கார்முகில் போன்ற கூந்தல், பந்து ஆடுவதற்கு ஏற்ப ஆடியது. அதனால் அவள் கூந்தலில் சூடியிருந்த மலர்களும் ஆடின. அந்த மலர்களைச் சுற்றி இருந்த வண்டுகளும் ஓடி ஆடின. இந்த வண்டுகள் ஆடி ஓடுவது கண்டு, மன்மதன் வில்லின் நாணில் உள்ள வண்டுகளும் ஆடினவாம். (மன்மதன் வைத்திருக்கும் கரும்பால் ஆன் வில்லை, இணைத்துக் கட்டும் கயிறாக வண்டுகள் அமைந்திருக்கும் என்பது புராணச் செய்தி)
இவ்வாறு இவள் பந்துகளை விளையாடும் காட்சி மிக அழகாக இருந்தது. சுமை காரணமாக இவளது மெல்லிய இடை மிக வருந்திக் கொண்டிருந்தது. "இவள் பந்தாடும் பேரழகைப் பார்த்து இனிமேல் உலகம் என்ன படுபடுமோ" என்ற புதிய வருத்தமும் சேர்ந்துக் கொண்டதால் இடை மேலும் வருந்தியதாம்.
அந்த மெல்லிய இடை துவண்டு துவண்டு நடுக்கங்கொள்ள, செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைப் போன்ற மங்கை, வசந்தவல்லி எனும் பெயருடைய அழகுடையாள் பந்து விளையாடினாள்.
என்னவொரு அழகான கவி நயம். கவிராயரின் வர்ணனை, நம்மையும் வசந்தவல்லியின் பால் இழுத்துச் சென்றுவிடுகிறது. குற்றாலத்திற்கு செல்லும் அவாவை இன்னும் அதிகப்படுத்துகிறது.
நான் பாடகனோ, இனிய குரல் வளம் மிக்கவனோ அல்ல, இருப்பினும் இந்தப் பாடலை சாதாரணமாகப் படிக்கும் பொழுதே சந்தமும் சேர்ந்துவிடுகிறது, கேளுங்கள்... நீங்களும் பாடி மகிழுங்கள் :-)
குற்றால மலைவளம் ->
வசந்தவல்லி ->
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்....