தமிழெமது தருமமுது - 3
இராமாயணம் என்பது மிகப் பெரிய ஒரு காவியம். அப்படிப்பட்ட காவியத்தின் கதை சுருக்கத்தை, கிட்டத்தட்ட முழுக் கதையையும் நாலு வரியில் சொல்வது சாத்தியமா? சாத்தியம் தான் என்று சொன்னது வேறு யாருமல்ல, நம் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான். அது மட்டுமல்ல, கதையின் முக்கிய கதாப்பாத்திரங்களைக் கூட இந்த நாலு வரியில் சொல்லிவிடுகிறார். வேறு யாராலும் இது போன்று செய்துவிட முடியாது, கம்பரால் மட்டும் தான் முடியும், கம்பர் ஒருவரால் மட்டும் தான் அது முடியும்.
கதையை, நாலு வரியில் சொன்னது மட்டும் சிறப்பு அல்ல, அதை அவர் சொல்லிய விதமும், பயன்படுத்திய அந்தச் சொற்களும் தான் இந்தப் பாடலின் சிறப்பு அம்சம்.
கடவுள் வாழ்த்துடன் இராமயணத்தை தொடங்கிய கம்பர், அடுத்ததாக 'அனுமன் துதி' என்ற ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அந்தப் பாடலில் தான், இராமயணத்தின் கதை சுருக்கத்தை அற்புதமாகாச் சொல்கிறார் கம்பர். அழகே வடிவான, அரசகுமாரரான இராமபிரான் தான் இராமாயணத்தின் கதை நாயகன் என்றாலும், வானர குலத்தைச் சேர்ந்த, அனுமனுக்கு இராமயணத்தில், ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது. அதனால் தான் அனுமனுக்கு என்று ஒரு தனிப்பாடலே வைத்துவிட்டர் கம்பர், அதுவும் இராமாயணத்தை தொடங்கும் முன்னரே.
ஐந்து என்ற ஒருவார்த்தையைக் கொண்டு பஞ்சபூதங்களைப் பற்றி, நாலு வரியில், மூன்று முக்கிய கதாப்பாத்திரங்களையும், இரட்டிப்புச்சுவையுடன் ஒன்றிணைத்து அழகாய்ப் பாடியுள்ளார் நம் கம்பர்.
அந்தப் பாடல் இதோ:
அஞ்சிலே யொன்று பெற்றா னஞ்சிலே யொன்றைத் தாவி
அஞ்சிலே யொன்றா றாக வாரியற் காக வேகி
அஞ்சிலே யொன்று பெற்ற வணங்குகண் டயலா ரூரில்
அஞ்சிலே யொன்றை வைத்தா னவனெம்மையளித்துக் காப்பான்!
இதை நமக்கு எளிதாகப் புரியுமாறுப் பிரித்து எழுதினால்:
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற் ஆக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்!
(நன்றாக கவனியுங்கள், அது அழித்து அல்ல அளித்து - தமிழ் எழுத்துகளைச் சரியாக உச்சரிக்காவிட்டால் பொருள் மாறிவிடும். ஒரு எழுத்து தான், ஆனால் அந்த ஒரு எழுத்து மாறினால், முழு பொருளும் மாறிவிடும், ஆகையால் கவனம் தேவை)
செய்யுள் சொல்லும் பொருளை முதலில் காண்போம், அடுத்து பதவுரையைப் பார்ப்போம்.
வாயு புத்திரனான அனுமன், கடலைத் தாவி, ஆகாய மார்க்கமாகச் சென்று, பூமாதேவியின் மகளான சீதாபிராட்டியை கண்டு வணங்கி, இலங்கையைத் தீ வைத்து எரித்து விட்டு வந்தான். அப்படிப்பட்ட அனுமன் எனக்கு கருணையளித்து காப்பான் என்பதே இந்த செய்யுளின் பொருள்.
இந்தப் பாடலில் 'அஞ்சிலே ஒன்று' என்ற சொற்றொடர் ஐந்து முறை வந்திருக்கிறது. இங்கு கம்பர் தம் கவித்திறமையை அழகாகக் காட்டுகிறார். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களை நேரடியாகக் குறிப்பிடாமல், இந்த ஒரு சொற்றொடர் மூலமாக எளிதாகவும், அழகாகவும் விளக்கிவிட்டார். என்னே அவரது கற்பனையும், கவிநயமும்.
பதவுரை:
அஞ்சிலே ஒன்று பெற்றான் |
பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுபகவான் பெற்ற பிள்ளை, அனுமனைக் குறிக்கிறது. |
அஞ்சிலே ஒன்றைத் தாவி |
பஞ்சபூதங்களில் ஒன்றான கடலைத் தாண்டி |
அஞ்சிலே ஒன்று ஆறாக |
இங்கு ஆறு என்பது வழியைக் குறிப்பிடுகிறது. பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாய வழியாகப் பறந்து சென்றதைக் குறிக்கும் வண்ணம் இப்படி பாடுகிறார் கம்பர். |
ஆரியற் ஆக ஏகி |
இராமனுக்காக தூது சென்று |
அஞ்சிலே ஒன்று பெற்ற |
பஞ்சபூதங்களில் ஒன்றான, பூமித்தாய் பெற்ற |
அணங்கு |
தெய்வீகப் பெண், அதாவது சீதை |
அயலார் ஊரில் |
அயல் நாடு, அதாவது இலங்கையைக் குறிக்கிறது. |
அஞ்சிலே ஒன்றை வைத்தான் |
பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை வைத்து எரித்தான் |
அளித்துக் காப்பான் |
கருணைக்கொண்டு காப்பான் |
பகைவருடைய நாட்டை நெருப்புவைத்து எரித்த வலிமையும், துணிவும், மேன்மையுமுடைய அனுமன், தாம் தொடங்கிய இராமாயண நூலை எழுதிட, எந்த இடையூறும் வராமல் எம்மைப் பாதுகாப்பான். ஆதலால், அந்தப் பெருமானை வணங்குகிறேன் என்று பாடுகிறார் கம்பர்.
இராமபிரானின் தர்ம பத்தினியான சீதாப்பிராடியினை, கண்டு, காமம் கொண்டு கவர்ந்து சென்ற இராவணன், தன் நாட்டில், அசோக வனத்தில் சிறைவைத்துள்ளான். சீதையை பிரிந்து வாடிய இராமபிரான், சீதையை தேடியலைந்த போது, அவருக்கு உதவிட வந்த அனுமரின் அரும்பெரும் முயற்சியினால் தான், சீதையின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, இராமரால், இராவணனை அழித்து சீதையை மீட்டுக் கொண்டு வரமுடிந்தது. ஆக இராமயணத்தில் அனுமனின் பங்கு மிக மிக முக்கியமானது. அதனால் தான் இந்த கதைச் சுருக்கத்தை, நாலு வரியில் சொல்லி, அனுமனை வணங்கி, நம்மையும் வியப்புக் கடலில் தள்ளி மகிழவைக்கிறார் கவிச்சக்கரவர்த்தி.
இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அதாவது யாரையும், எந்தப் பொருளையும், நேரடியாகப் பெயரைச் சொல்லிக் குறிப்பிடாமல், மறைமுகமாகவே நமக்கு புரியவைத்துள்ளார் கம்பர்.
அதே போல், இந்தப் பாடலில் 'அஞ்சிலே ஒன்று' என்ற சொற்றொடர் பல முறை வந்திருக்கிறது. பல முறை வந்தும் ஐந்தில் ஒன்று என்ற ஒரு பொருளைத் தான் தருகிறது. அதனால் இதனை 'சொற்பொருள் பின்வருநிலை அணி" என்று சொல்லலாம்.
ஆனால் அந்த 'அஞ்சிலே ஒன்று' என்ற சொற்றொடர், ஒவ்வொரு முறையும் அதற்கு அடுத்து உள்ள சொற்களோடு சேர்ந்து வேறு வேறு பொருளை நமக்கு உணர்த்துகிறது. இப்படி ஒரு பொருள் தரும் சொற்களை வைத்து, பல பொருள் தரும் படி பாடி, மாய வித்தை செய்தது, கம்பரின் கவித்திறமையை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. அவரது கவித்திறமைக்கு இந்த ஒரு சான்றே போதும். ஆனால், அவரது ஒவ்வொரு பாடலுமே சான்று தான் என்பதை நாம் இனி வரும் வாரங்களில் பார்ப்போம்.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், என்று அறிஞர்கள் சொன்னது, விளையாட்டுக்காக சொல்லப் படவில்லை. கம்பனின் கவித்திறமையை கண்டு, கேட்டு இரசித்து அனுபவித்தவர்கள் உதிர்த்த உண்மை தான் அச்சொற்றொடர் என்பது இந்த ஒரு பாடலை வைத்தே நாம் உறுதியாக சொல்லிவிட முடியும். ஒரு பானைச் சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்று சொல்வதைப்போல், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட கம்ப இராமயணத்திற்கு, இந்த ஒரு பாடலை வைத்தே மற்ற பாடல்கள் எப்படி சிறப்பாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்லிவிடலாம்.
இப்பொழுதெல்லாம் சினிமா வருமுன், அதனுடைய ட்ரெயிலரை (Trailer) வெளியிடுகிறார்கள், கம்பரும் அப்படி ஒரு ட்ரெயிலைரைத்தான் இந்தப் பாடலில் அன்றே காட்டிச் சென்றுள்ளார். இரண்டரை மணி நேர படத்திற்கு இரண்டு நிமிட ட்ரெயிலரைப் போல, நாற்பாதாயிரத்திற்கும் மேற்பட்ட வரிகளைக்கொண்ட கம்பராமாயணத்திற்கு நாலே வரியில் ட்ரெயிலர் காட்டி நம்மை ஆச்சரியப்படுத்திக் கட்டிப்போட்டுவிட்டார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
மீண்டும் இன்னொருப் பதிவில் கம்பரை சந்திப்போம்.
நன்றி.
இராம்ஸ் முத்துக்குமரன்.