இரண்டாயிரத்துப் பதினேழாம் ஆண்டுக்கு முன் வரை, இந்தியாவில் வாட் (VAT Value-Added Tax - மதிப்புக் கூட்டப்பட்ட வரி) கலால் வரி (excise duty), செஸ் வரி (Cess - மேல் வரி/கூடுதல் வரி), விற்பனை வரி(Sales Tax -சேல்ஸ் டாக்ஸ்) என 15 க்கும் மேற்பட்ட பல விதமான வரிகள் இருந்தன.
இதன் காரணமாக பல பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் பாரதப் பிரதமராக மோடிஜி அவர்கள் பதவியேற்றப்பின், இந்த வரிகளை எல்லாம் சீரமைத்து எளிதாக்க வேண்டும் என முயற்சி செய்து, பல கட்ட ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைக்குப் பின், 2017 ஆம் ஆண்டு புதிதாக ஜி எஸ் டி (GST Goods and Services Tax - சரக்கு மற்றும் சேவை வரி) கொண்டு வரப்பட்டது.
புதிய ஜிஎஸ்டி வரி, 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு அடுக்குகளாக வகைப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது அந்த ஜி எஸ் டி வரிகளை மீண்டும் சீரமைத்து, இன்னும் எளிமையாக்கப்பட்டு, நவராத்திரியின் முதல் நாளான 22-9-2025 திங்கட்கிழமையன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி நான்கு அடுக்குகளாக இருந்த வரி, தற்பொழுது 5% மற்றும் 18% என இரு அடுக்ககளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பின் மூலம் 90% பொருட்கள், 5% வரி வரம்பிற்குள் வந்துள்ளன. அது மட்டும் அல்லாமல், அத்தியாவசிய பொருட்கள், 33 விதமான உயிர்காக்கும் மருந்துகள், உள்ளிட்ட பல பொருட்களுக்கு முற்றிலுமாக வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு உரையாற்றிய பிரதமர் மோடிஜி அவர்கள், நாட்டு மக்களுக்கு ஒரு தீபாவளி பரிசு கொடுக்கப்போவதாக அறிவித்தார். தீபாவளிக்கு சில வாரங்கள் முன்னதாகவே அது மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜி எஸ் டி வரியினால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்பது நிச்சயம்.
குறிப்பாக நம் தமிழகம் இந்த மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியினால் எப்படி பலன் பெறப் போகிறது என்று பார்ப்போம். இது ஒரு ஆங்கில இணையப் பத்திரிகையில் வந்த செய்தியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது - இக்கட்டுரைக்கு கீழே அதன் இணைப்பைக் கொடுத்துள்ளேன்)
ஜி.எஸ்.டி மறுசீரமைப்பால் பலன் பெறப்போகும் தமிழகம்
பாரதக் கலாச்சாரப் பாரம்பரியத்திலும், தொழில் வளர்ச்சியிலும் தமிழகம் எப்பொழுதும் சிறந்து விளங்குகிறது. அதனால் இந்த மறுசீரமைப்பினால் பல விதமான பொருட்களுக்கு வரி குறைய வாய்ப்புள்ளதால், பல புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகி தமிழகமும், தமிழக மக்களும் அதிகம் பயனடையப் போகிறார்கள்.
ஆடை உற்பத்தி, கைவினைப் பொருட்கள், தென்னை நார் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, மீன்வளம் மற்றும் மீன்பிடித்தொழில், மின்னணுப் பொருட்கள், மோட்டார்/ஆட்டோமொபைல் வாகனங்கள், மீள்தகு எரிசக்தி/புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (renewable energy) மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், ஆயுதத்தயாரிப்பு போன்ற பலவற்றிற்கு வரி குறைக்கப்பட்டுள்ளதால், இந்த வரி சீரமைப்பின் மூலம் பெரிதும் பயனடையும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்த வரி சீரமைப்பால், சாமானிய மனிதர்களுகக்கு மட்டுமல்ல, சிறுகுறு மற்றும் நடுத்தர (MSME - Micro, Small, and Medium Enterprises,) தயாரிப்பு தொழில் முனைவோர்களும், ஏற்றுமதியாளர்களும் பயனடைவதோடு, புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். புதிய தொழில் முனைவோர்களும் உருவாகுவார்கள் என நம்பப்படுகிறது.
திருப்பூரில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகள், காஞ்சிபுரப் பட்டுசேலைகள் தொடங்கி மின்சார வாகனப் பொருட்கள், பாதுகாப்பு ஆயுத உபகரணங்கள், அது சம்பந்தப்பட்ட பொருட்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்குத் தேவையானப் பொருட்கள் ஆகியவை விலை குறைய வாய்ப்புள்ளது. புதிய தொழில் முனைவோர்கள் உருவாகி ஆரோக்கியமான தொழில் போட்டிகள் உருவாக வாய்ப்புள்ளது. இது மாநிலத்துக்கும் மாநில மக்களுக்கும் பலன் சேர்க்கும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.
இந்த வரி மறுசீரமைப்பால், ஆடைகள், கைவினைப்பொருட்கள், தென்னை நார் பொருட்கள், உணவு மற்றும் மீன்பிடி தொழில்களுக்கு உள்ள வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது, சில பொருட்களுக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பொருட்களின் விலை 6% இலிருந்து 11% வரை குறைய வாய்ப்பு உள்ளது.
நம் கலாச்சாரப் பாரம்பரியத் தொடர்புடையப் பொருட்களான காஞ்சிப்பட்டு, பவானி ஜமுக்காளம், விரிப்புகள், சுவாமிமலை சிலைகள் மற்றும் மணப்பாறை முறுக்கு போன்றவற்றின் விலை குறைவதால் விற்பனை பெருக வாய்ப்புள்ளது.
பெரும் தொழில்களான வாகன உற்பத்தி, மீள்தகு எரிசக்தி, மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, பாதுகாப்பு ஆயுத தொழிற்சாலைகள் ஆகியவை, அந்தந்த தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்களின் விலைக் குறைப்பு மற்றும் உள்ளீட்டு செலவுகள் குறைவதால் நன்கு பயனடைவார்கள்.
திருப்புரில் ஆயத்த ஆடை நிறுவனங்களில் 10 இலட்சம், வாகன உற்பத்தி தொழிற்சாலையில் 22 இலட்சம் மற்றும் மீன்பிடித் தொழிலில் 10.5 இலட்சம் தொழிலாளர்கள் இவற்றால் நேரடி பயன் பெறுவார்கள்.
பின்னாலாடை மற்றும் கைத்தறி ஆடைகள்
இந்தியாவின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில், திருப்பூர் மாவட்ட பின்னலாடை கிட்டத்தட்ட 90% பங்கு வகிக்கிறது. இந்த வரி சீரமைப்பினால், பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான பல பொருட்களின் விலை குறைவதால், இலாப சதவிகிதம் அதிகரிக்கும்,. அதனால் மேலும் புது நிறுவனங்கள் வர வாய்ப்புள்ளது, அதனால் உலகளாவிய ஏற்றுமதிப் போட்டியில் இன்னும் வேகமாகப் பங்கேற்கலாம். அதே போல், காஞ்சிபுர பட்டுப் புடவைகள் மற்றும் புவிசார் குறியீடு பெற்றுள்ள பவானி ஜமுக்காளம், விரிப்புகள், மதுரை சுங்கடிப் புடவைகள் போன்றவற்றின் விலை குறையும். அதனால் இன்னும் பலரால் இவைகளை வாங்கமுடியும். அதிக விற்பனையாகும். தேவையும் அதிகரிக்கும், அதனால் இத்தொழிலில் உள்ள இலட்சக்கணக்கான நெசவாளார்கள் மற்றும் கைத்தறி தொழில் புரியும் கைவினைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
கைவினை மற்றும் பாரம்பரியப் பொருட்கள்
சுவாமி மலை சுற்றுவட்டாரத்தில் செய்யப்படும் வெண்கல சிலைகள், நாகர்கோவில் பகுதிகளில் செய்யப்படும் கோவில் நகைகள், தஞ்சாவூர் சித்திரப் பொருட்கள், மாமல்லபுர சிற்பங்கள் ஆகியவற்றிற்கு உள் நாட்டு வெளி நாட்டு சந்தைகளில் மேலும் வரவேற்பு இருக்கும். இந்த வரி சீரமைப்பால் இந்தப் பொருட்களின் விலை 6% - 7% குறை வாய்ப்புள்ளது. அதனால் சுற்றுலா மேம்பட வாய்ப்புள்ளது மற்றும் வெளிநாடு வாழ் மற்றும் புலம்பெயர் இந்தியர்கள் இவற்றை, இணைய மூலம் வாங்கவும் வழி செய்கிறது.
தென்னை நார், உணவு, மீன்பிடித் தொழில்
பொள்ளாச்சி மற்றும் கடலூர் பகுதிகளில், தென்னை நார்த் தொழில் பெரும்பாலும் மகளிர் கைவினைஞர்களால் அதிகம் செய்யப்படுகிறது. பாய், தென்னை நாரால் செய்யப்படும் கயிறு போன்ற பொருட்களின் வரி குறையும், அதனால் அவர்கள் பயனடைவார்கள். ஆவின் போன்ற பால் கூட்டுறவு சங்கங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரிக்கும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புவிசார் குறியீடு பெற்றுள்ள மணப்பாறை முறுக்குப் போன்ற உணவு பொருட்களின் விலை, இந்த வரி குறைப்பால் குறையும். அது மேலும் வியாபாரத்தைப் பெருக்கும். தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் உள்ள கடல் சார் உணவு தொழில் ஏற்றுமதி பெருக வாய்ப்புள்ளது, மேலும் புது நிறுவனங்கள் உருவாகவும், போட்டி அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இது அங்குள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும்.
தொழிற்சாலைகள் மற்றும் உயர்தொழில்நுட்ப பிரிவு
தமிழகத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ஸ்ரீபெரும்புதூர், ஓசூர், ஆவடி, கோயம்பத்தூர் போன்ற தொழிற்சாலைத் தொகுப்புகள், இந்த வரி சீரமைப்பால் அதிக நேரடி பயன் பெறுவார்கள். வரி குறைக்கப்பட்ட குழாய்கள், மின்னணு பொருட்கள் மற்றும் மீள்தகு எரிசக்திக்குத் தேவைப்படும் கருவிகள் போன்றவை 6% - 8% வரை குறைய வாய்ப்புள்ளது. இது தொழில் விரிவாக்கம் மற்றும் ஏற்றுமதிக்கு மேலும் உதவும். அதுமட்டும் அல்லாமல் மின்சார வாகன மற்றும் மின்னணு மையமாகத் திகழும் பகுதிகள் மேலும் வலுப்பெறும், மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்தப் பல திட்டங்கள் சாத்தியப்படும்.
பாதுகாப்பு மற்றும் இரயில்பெட்டி தொழிற்சாலைகள்
இந்தியாவின் பாதுகாப்புத் தொழிற்சாலை உள்ள மாநிலங்களில் முன்னணியில் திகழும் தமிழகம், பாதுகாப்பு மற்றும் இராணுவத்திற்கு தேவையான உபகரணங்கள், கருவிகள் (hardware, walkie-talkies, testing equipment) மற்றும் அதை சார்ந்தப் பொருட்கள் (spares), இந்த மறு சீரமைக்கப்பட்ட வரியமைப்பில் விலக்குப் பெற்றுள்ளமையால், நல்ல பலன் பெறும். சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலையும் (Integral Coach Factory) விலை குறைக்கப்படும் மூலப்பொருட்கள் மற்றும் உள்ளீட்டு செலவுகள் குறைவதால் பயனடையும். அது மேலும் 'வந்தே பாரத்' போன்ற நவீன பெட்டிகள் மற்றும் சாதனங்களின் உற்பத்தித் திறனை மேம்பட்டுத்த வழிவகுக்கும்.
சமநிலை வளர்ச்சிக்கானப் பாதை
இந்த வரி மறுசீரமைப்பால், தமிழகத்தின் தனித்துவமான பொருளாதாரம், அதாவது, கலாசாரப் பாரம்பரியம் சார்ந்தத் தொழில்களும், அதே நேரத்தில் நவீனத் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களும், ஒரு சேர பலன் பெற்று வளர்ச்சி அடைந்துப் பயன்பெறும். விலைக்குறைப்பினால் இலாபம் அதிகமாகும், ஏற்றுமதி பெருக வழிவகுக்கும், புது தொழில்கள் உருவாகும், ஆரோக்கியமான தொழில் போட்டிகள் உண்டாகும். இந்த வரி சீரமைப்பால், விலைகுறைக்கப்பட்ட பொருட்களால் சாமானிய மக்களின் சேமிப்புப் பெருகி, வாழ்க்கைத் தரம் மேம்படும். அதே நேரத்தில் தமிழகம் தொழிற்சாலைகள் நிறைந்த முதன்மையான மாநிலம் என்ற பெயரை இன்னும் வலிமையாக தக்கவைத்துக் கொள்ளும்.
சுயசார்பு நிறைந்த பாரதம் (Atmanirbhar Bharat) மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம் 2047 (Viksit Bharat 2047) என்ற இலக்கை நோக்கி நகரும் இந்தியாவின் இலட்சியத்தை அடைய மிகவும் முக்கியமான ஒரு மாநிலமாகத் தமிழகம் உருவெடுக்கும். ஏனென்றால் தமிழகம் கலாச்சாரம் மற்றும் நவீன தொழில்நுட்பம் இரண்டும் சார்ந்த தொழில்கள் பரவி இருக்கும் மாநிலம். இந்த வரி சீரமைப்பு தமிழகத்தில் புதிய வாய்ப்புகளையும் வளர்ச்சிகளையும் திறந்துவிடுவதற்கான ஒரு சாவியாகத் திகழப்போகிறது.
(ஆங்கில செய்தி: Tamil Nadu set to reap big gains from GST Rationalisation)
இது வரை ஜி எஸ் டி வரியை வைத்து பலமான எதிர்ப்பு அரசியல் செய்து வந்த தமிழகம், அந்த வரியினால் மிகவும் பயனடைந்துள்ளது என்பது தான் உண்மை. இப்பொழுது இந்த மறுசீரமைக்கப்பட வரியினால் மேலும் பலனடையப் போகிறது. இனிமேலாவது இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு எதிர்ப்பு அரசியல் செய்யாமல், தமிழகத்தை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல கவனம் செலுத்துமா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.
நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்.