பட்டுக்கோட்டை நாடியம்மன் - பாதம்
தொட்டு வணங்கினால் கோடி நன்மை - கதிர்
பட்டு விலகிடும் பனிப் போலே - நமை
விட்டு விலகிடும் பிணி யாவும்!
கருணை தெய்வம் நாடியம்பாளே
சரணம் என்று தேடி வந்தாலே
உலகை காக்கும் கோடி கரமே - உன்
இல்லம் காக்க ஓடி வருமே!
ஊரின் எல்லையில் வீற்றிருப்பாள்
நேரும் தொல்லைகள் போக்கிடுவாள்
மாறும் உலகில் என்றும் மாறாத - அன்பு
ஊறும் அழகைக் காண விழிப் போதாதே!
சித்திரை மாதம் ஊர் கூடும் - அழகிய
சித்திரம் போல தேர் ஓடும் - மக்கள்
சமுத்திரம் என ஊர் மாறும் - தேர்
பத்திரமாய் நிலைப் போய்ச் சேரும்!
பொழியும் மழை பேதம் பார்ப்பதில்லை - அன்னை
விழியும் பெய்கின்ற மழை போலே - அவள்
ஆலயம் நுழைந்தால் அது புரியும் - அங்கே
மேலோர் கீழோர் என்ற இருள் விலகும்!
மாலை மயங்கும் அந்தி நேரத்திலே - அம்மன்
ஆலய குளக் கரை யோரத்திலே
வீற்றிருந்தால் மனம் அமைதி பெறும்
ஊற்றுபோல் உள்ளத்தில் மகிழ்ச்சி வரும்!
தஞ்சைத் தரணியில் அமைந்திருக்கும் - எழில்
கொஞ்சும் பட்டுக்கோட்டை நகரினிலே
நஞ்சை அமிழ்தாய் மாற்றிடும் அம்மனை
நெஞ்சுருகி வணங்கி அருள் பெறுவோமே!
பக்தியுடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.
இந்தப் பாடலை PDF வடிவில் படிக்க, இங்கே சொடுக்கவும் (Click)