Chidhambaram Natarajar Temple

தமிழெமது தருமமுது

வருக்க வார்த்தைகள் - ய் வருக்கம்

வருக்க வார்த்தைகள் - ய் வருக்கம்

அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குள் நுழைந்த தந்தையைக் கண்டவுடன், வீட்டுப்பாடம் செய்துகொண்டிருந்த கலைவாணி, 'ஹய்யா... அப்பா வந்துட்டாங்க..." என்று வேகமாக ஓடி வந்து தன் தந்தையைக் கட்டியணைத்து முத்தமிட்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள்.

'என்னம்மா, இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறாய்? என்ன காரணம்?" என்று கேட்டார் தந்தை.

"ஊரிலிருந்து மாமா தொலைபேசியில் அம்மாவிடம் பேசினார்கள். விடுமுறைக்கு தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, குட்டிப் பாப்பா எல்லோரும் நம்ம வீட்டுக்கு வருகிறார்களாம். குட்டிப் பாப்பாவுடன் விளையாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் தான் நான் மிகவும் மகிழ்ச்சியா இருக்கிறேன்" என்றாள் கலைவாணி.

அப்படியா... மிகவும் நல்ல சேதி தான். ஆமாம் என்று வருகிறார்கள்?

"அடுத்த வாரம் வருகிறார்களாம்" என்று சொல்லிக்கொண்டே வந்தார், கலைவாணியின் அம்மா.

"அப்பா... அப்பா..." என்று கத்தினாள் கலைவாணி.

என்னம்மா? ஏன் இப்படி கத்துகிறாய். அவர்கள் வரும் வரையில் உன்னை சமாளிக்க முடியாது போலிருக்கிறதே என்றார் சிரித்துக்கொண்டே.

ஆமாம் அப்பா. ஆனால் நான் கூப்பிட்டது அதற்காக இல்லை. இன்று நான் தமிழில் புதிதாக ஒன்று கண்டுபிடித்தேன், அதை உங்களிடம் சொல்லவேண்டும்.

அப்படியா? என்ன கண்டு பிடித்தாய்?

"தாத்தா, மாமா, பாப்பா" இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லிப் பாருங்கள், அதில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. என்ன என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?

"இவையெல்லாம் உறவைக் குறிக்கும் சொற்கள். அது தான் ஒற்றுமை" என்றார் கலைவாணியின் தந்தை.

அது மட்டும் இல்லையப்பா, இன்னொரு ஒற்றுமை இருக்கிறது. என்னவென்று நான் சொல்லட்டுமா?

எங்கே சொல்லு பார்க்கலாம்...

"தாத்தா என்ற சொல் எல்லாம் 'த்' வரிசை சொற்களாக இருக்கிறது. அதே போல் மாமா மற்றும் பாப்பா என்ற சொற்களும் ஒரே வரிசைச் சொற்களாக இருக்கிறது. உங்களுக்கு இது கூட தெரியலை..." என்று கூறி கைக்கொட்டி சிரித்தாள் கலைவாணி.

"அட ஆமாம், நான் அதை கவனிக்கவேயில்லை. அருமை கலைவாணி" என்று பாராட்டினார்.

"இது போன்று வேறு சொற்களும் தமிழில் உள்ளதா அப்பா?" என்று கேட்டாள் கலைவாணி.

ஆம் இன்னும் பல சொற்கள் உள்ளன. சட்டென என் நினைவுக்கு வருவது... காக்கா தான். மற்ற சொற்களையும் கண்டுபிடித்து ஒரு பட்டியல் தயார் செய்யப் போகிறேன். எனக்கு நல்லதொரு தமிழ்ப் பணி கொடுத்துவிட்டாய் கலைவாணி. நன்றி என்று சிரித்துகொண்டு பாராட்டினார் தந்தை.

அந்த பட்டியல் இதோ...


ஓர் எழுத்து சொற்களை சென்ற முறை பார்த்தோம். (அதன் இணைப்பு இங்கே பார்க்கலாம்). ஒரே வகை எழுத்துகளை கொண்டு தமிழில் சொற்கள் அமைக்க முடியும் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. ஓர் எழுத்து வருக்கத்தைக் கொண்டே அமைந்த வார்த்தைகள் தமிழில் ஏராளம் உள்ளன. தமிழ் மொழியின் பல சிறப்புகளில் இதுவும் ஒன்றாகும். தமிழைப் போன்று ஒலியை முன்னிலைப்படுத்தி (Phonetic) உள்ள இந்திய மொழிகள் சிலவற்றிலும் இது போன்று அமையலாம், உதாரணமாக ஹிந்தி மொழியில் மாமா (चाचा / काका ) அக்கா (दीदी) சிவப்பு (लाल) போன்ற சொற்களைச் சொல்லலாம். ஆனால் நம் தமிழில் உள்ளது போல், இத்தனை சொற்கள் இருக்குமா என்பது ஐயமே.

வாருங்கள் என்னென்ன சொற்கள் என்று பார்க்கலாம். அதிக உபயோகத்தில் இல்லாத வார்த்தைகளுக்குப் பொருள்களையும் கொடுத்துள்ளேன்.  பெயர்கள், பிறமொழி சொற்கள் தவிர்த்து, கிட்டத்தட்ட 121 சொற்கள் வரை தொகுக்க என்னால் முடிந்தது. இதில் விடுபட்டுப்போன, உங்களுக்குத் தெரிந்த சொற்களை, பின்னூட்டத்தில் பகிரவும்.

 

நன்றி

அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.

 

வருக்க வார்த்தைகள்

 

கக்கு

 

காக்க

 

காக்கா

(காக்காக்கா?  காக்காக்கு, காக்காக்கே, காக்காக்கோ?)

காக்கை

(காக்கைக்கா? காக்கைக்கு, காக்கைக்கே, காக்கைக்கோ?)

குகு

அமாவாசை, கூகையொலி

குகை

 

குக்கி

வயிறு

குக்கு

குந்துதல்

குக்கூ

 

கூகை

(கூகைக்கா? கூகைக்கு, கூகைக்கே, கூகைக்கோ?)

கொக்கி

 

கொக்கு

(கொக்கா?  கொக்கை, கொக்கே, கொக்கோ?  கொக்குக்கு, கொக்குக்கே)

கோகு

தோள், வஞ்சகன், கழுதை

சசி  

கற்பூரம், முயற்கறை உடைய சந்திரன், இந்திராணி, இந்துப்பு, கடல், மழை

சச்சு

சிறுமை, சந்தடி, தொந்தரவு, பறவைமூக்கு

சாசி

திராய்ப்பூண்டு/மலைப்பூண்டு, தாய்ப்பால்

சாச்சா

குறட்டைப்பருப்பு

சிசு

 

சீசா

கண்ணாடிக்குப்பி

சீச்சீ

இகழ்ச்சிக்குறிப்பு

சுசி

சுத்தம், வெண்மை, நெருப்பு, சந்திரன், முதுவேனில், கேடைக்காலம்

சுச்சு

இஞ்சி, சுக்கு, சுண்டிச்செடி, பறவை மூக்கு

சூசி

ஊசி, ஊசிமுனைபோல் அமைக்கும்படை வகுப்புவகை, மெல்லிய கரையுள்ள துணிவகை

செச்சை    

வெள்ளாட்டுக்கடா, ஆடு, சிவப்பு, சந்தனக்குழம்பு, நீறு, சட்டை, மேடராசி, தழைகள், குடில், செங்காடு, உதயசந்திரன், இலிங்கப்பெட்டகம். இரட்டை. வெட்சி. செந்துளசிச்செடி

சௌசௌ

ஒரு வகை காய்

தத்த

அசைய, குதிக்க, அலைபாய

தத்தி

கொடை, சத்துவம்/பலம்

தத்து

 

தத்தை

 

ததி

தக்க சமயம், தயிர், சத்துவம்/பலம்

ததை

நெருங்கு, சிதைவுறு

தாத்த

கொழிக்க, ஒளித்து வைக்க

தாத்தா

 

தாத

பிரம்மன்

தாதா

தந்தை, தாத்தா, பெரியோன், கொடையாளி, பிரமன்

தாதி

வேலைக்காரி, செவிலித்தாய், தோழி, பரணி நட்சத்திரம், வாதி

தாது

 

தாதை

தந்தை

தித்த

கசப்பு, தீ, கட்டுக்கதை. ஒளி

தித்தா

வட்டத்திருப்பி, தாளக்குறிப்பு

தித்தி

 

திதி

நிலைமை, நிலைபேறு, சந்திரன் நாள், பிரதமை முதலிய திதிகள், செல்வம், சிறப்பு, வாழ்வு, வளர்ச்சி, காப்பு, கனம், இருப்பு

தித்தித்த

(தித்தித்தது, தித்தித்ததா?  தித்தித்ததோ? தித்தித்ததே, தித்தித்ததை)

தித்தித்து

 

தீது, தீதை

 

துத்தி

பாம்பின் படப்பொறி. உடலில் தோன்றும் தேமல். யானை மத்தகப்புள்ளி. செடிவகை. ஒத்துக்கருவி. திருவடிநிலை

துத்து

பொய், வஞ்சனை, தப்பிதம், கம்பளிப்போர்வை

துதி

 

துதித்த

(துதித்தது, துதித்ததா? துதித்ததோ?  துதித்ததே, துதித்ததை)

துதித்து

 

துதை  

நெருக்கம்

தூது

 

தூதா

தூதர்

தூதி

தூது செல்பவள், பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று

தூதை  

சிறு மட்கலம்.; சிறு மரப்பானை. சிறு சம்மட்டி. ஒரு சிறிய அளவு

தூத்தூ

உமிழ்தல்

தெத்து

மூலை. வேலியடைப்பு. ஏமாற்று. சுவீகாரப்பிள்ளை

தேதி

 

தேது

தேசு, ஒளி

தைத்த

(தைத்ததா? தைத்ததோ? தைத்தது, தைத்ததே, தைத்ததை)

தைத்து

 

தொதி

பப்பரப்புளியமரம், ஒதியமரம்

தொத்த

தொற்ற, படர, ஒட்ட (தொத்ததே)

தொத்து

தொற்று

தோது

 

பப்பு

பரப்பு, ஒப்பு, துவரம்பருப்பு

பாப்பா

 

பாபி

பாவி

பீப்பா

 

பூப்பு

 

யாய்       

  தாய்

(யாயா? யாயை, யாயே, யாயோ?)

மாமா

 

மாமி

 

மாமை

நிறம், அழகு, கருமை, மேனி, துன்பம்

மும்மை

மூன்றாயிருக்குந் தன்மை, மூன்று, உம்மை; இம்மை; மறுமை என்னும் முப்பிறப்பு, இறப்பு; நிகழ்வு; எதிர்வு என்னும் மூன்று காலங்கள்

வவ்வு

கவர்தல்

வாவி

 

வாவு

தாண்டு

வீவு

அழிவு, சாவு, கெடுதி, முடிவு, குற்றம், இடையீடு

வேவு

 

வேவை

வெந்தது, சமைத்தது

வைவு

வசவு, சாபம்

வௌவி

மான்

வௌவு

கைப்பற்று, திருடு, கவர்

காக்கி

 

சூசை

 

கைகேகி

 

பாபு

 

பாபா

 

லால்

 

லாலா

 

லாலி

தாலாட்டு

லைலா

 

லீலா

 

லீலை

 

 


 

தொடர்புடைய கட்டுரைகள்

Thiruvennainalloor Sivan

சொற்றமிழ் எனும் நற்றமிழ்

சீர்காழி சட்டைநாதர்

இறைவன் எழுதிக் காட்டும் மொழி எது தெரியுமா?

குற்றால அருவி

குற்றாலக் குறவஞ்சி

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net